ஊட்டி:ஊட்டி நகரின் பல இடங்களில், சாலையில் வைக்கப்படும் 'டிவைடர்'களை அகற்றிவிட்டு, வாகனங்கள் நிறுத்துவதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
ஊட்டி நகரில் சீசன் காலங்கள் இல்லாமல், மற்ற நாட்களில் கூட, கோவை, திருப்பூர், ஈரோடு, அன்னுார், அவிநாசி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 3,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன.
இதனால், குறுகலாக உள்ள ஊட்டி நகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில், மத்திய பஸ் ஸ்டாண்ட், ஏ.டி.சி., காபிஹவுஸ் சந்திப்பு, மெயின்பஜார், கலெக்டர் அலுவலகம் சாலை, சேரிங்கிராஸ், தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சாலைகளின் பல இடங்களில் போக்குவரத்தை சீரமைக்க, 250 'டிவைடர்கள்' வைக்கப்பட்டுள்ளன.
சாலைகளில், வாகனங்கள் அதிகளவில் வரும் போது, டிவைடர்களை அப்புறப்படுத்தும் சில டிரைவர்கள், வாகனங்களை நிறுத்தி செல்வதும், போக்குவரத்து விதிக்கு மாறாக டிவைடரை தாறு மாறாக வைத்து செல்கின்றனர்.
சில பகுதிகளில் டிவைடர்கள் உடைந்த நிலையில் உள்ளன. இதனால், சாலையில் செல்லும் வாகனம், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுரேஷ் கூறுகையில், ''போக்குவரத்து விதிகளை மதிக்கும் வகையில், டிவைடர்கள் முறையாக வைக்கப்பட்டுள்ளன. குறைபாடுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். டிவைடர்கள் உள்ள பகுதிகளில், டிரைவர்கள் அவற்றை அகற்றி, வாகனங்களை நிறுத்த கூடாது,'' என்றார்.