சேலம்: அரசு அலுவலகங்களில், லஞ்சம் பெறுவதை தடுக்க, இடைத்தரகர்கள் நடமாட தடை விதித்து, கலெக்டர் ரோகிணி உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில், நான்கு ஆர்.டி.ஓ., அலுவலகங்கள், 13 தாலுகா அலுவலகங்கள், அனைத்து துணை ஆட்சியர், மாவட்ட வழங்கல் அலுவலர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர், ஆதிதிராவிடர் நல அலுவலகத்துக்கு, கலெக்டர் ரோகிணி அனுப்பிய சுற்றறிக்கை: அனைத்து அரசு ஊழியர்கள், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும். வெளி நபர்கள் யாரும் பணிபுரியவில்லை என்பதை உறுதிபடுத்த வேண்டும். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை, விழிப்புணர்வு குறித்த பலகையை, மக்கள் பார்வைக்கு படும்படி, இடம்பெறச்செய்ய வேண்டும். குறிப்பாக, 'மக்கள் சாசனம்' குறித்த பலகையை, அனைத்து அலுவலகங்களில், மக்கள் பார்வைக்கு தெரியும்படி வைக்க வேண்டும். தகவல் அறியும் உரிமை, அறிவிப்பு பலகையில் பொது தகவல் அலுவலர், மேல் முறையீட்டு அலுவலர் விபரத்தை, ஒவ்வொரு அலுவலகங்களிலும் வைக்க வேண்டும். இந்த உத்தரவுகள், தங்கள் அலுவலகத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது என்ற அறிக்கையை, உடனடியாக அனுப்பிவைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.