| அறநிலைய துறை கோவில்களில் மாவட்ட நீதிபதி...ஆய்வு!  இம்மாத இறுதிக்குள் முடித்து அறிக்கை வழங்க உத்தரவு Dinamalar
அறநிலைய துறை கோவில்களில் மாவட்ட நீதிபதி...ஆய்வு!  இம்மாத இறுதிக்குள் முடித்து அறிக்கை வழங்க உத்தரவு
Advertisement
 
Advertisement

மாற்றம் செய்த நாள்

13 செப்
2018
01:24
பதிவு செய்த நாள்
செப் 13,2018 01:19

காஞ்சிபுரம்:அறநிலையத் துறை பராமரிப்பில் உள்ள முக்கிய கோவில்களில், அடிப்படை வசதிகள், பக்தர்களுக்கு பாதுகாப்பு போன்றவை உள்ளனவா என, மாவட்ட நீதிபதி ஆய்வு செய்யவுள்ளார். இம்மாத இறுதிக்குள் ஆய்வு முடித்து, அறிக்கை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.


காஞ்சிபுரம் மாவட்டத்தில், அறநிலையத் துறை பராமரிப்பில், 1,389 கோவில்கள் உள்ளன.
இவை, பட்டியல் சார்ந்தவை, பட்டியல் சாராதவை என, பிரிக்கப்பட்டுள்ளன.பட்டியல் சாராத கோவில்கள், உதவி ஆணையர் கட்டுப்பாட்டிலும், பட்டியல் சார்ந்த கோவில்கள், இணை ஆணையர் கட்டுப்பாட்டிலும் உள்ளன.


கோவில்களில் உண்டியல் வருமானம், கோவில் நிலங்கள், கடைகள் மூலம் கிடைக்கும் வருவாயை பொருத்து, அதன் தரம் நிர்ணயிக்கப்படுகிறது.சைவ குரவர்களால் பாடல் பெற்ற, சைவ கோவில்களும், ஆழ்வார்களால் மங்கள சாசனம் செய்யப்பட்ட வைணவ கோவில்களும்,
மாவட்டத்தில் உள்ளன.


மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட அந்த கோவில்களில், சிலவற்றில் வருமானம் இன்றி
முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளன.இதனால், கோவில்களுக்கு செல்லும் பக்தர்களுக்கு வசதிகள், பாதுகாப்பு போன்றவை இல்லை.காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்று விளங்கும் ஏகாம்பரநாதர் கோவில், காமாட்சி அம்மன், வரதராஜப்பெருமாள் ஆகிய கோவில்களில், பக்தர்களுக்கு தேவையான வசதிகள் உள்ளன.


அந்த கோவில்களில் கழிப்பறை வசதிகள் வெளியில் உள்ளன. ஆனால், அதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.பிற மாநிலத்தில் இருந்து செல்லும் யாத்ரீகர்களிடம், அடாவடி வசூல் செய்யப்படுகிறது. நகராட்சிக்கு சொந்தமான இலவச கழிப்பறைகளை, கட்டண கழிப்பறையாக சிலர் மாற்றியுள்ளனர்.இது போன்ற முறைகேடுகள் குறித்து, மாவட்ட நீதிபதி கோவில்களில் ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க வேண்டும் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இதனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கியமான கோவில்களில், இம்மாத இறுதிக்குள் மாவட்ட நீதிபதி ஆய்வு நடத்துவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.அன்னதானம் வழங்கப்
படும் கோவில்களுக்கு சென்று, அடிப்படை வசதிகள், பக்தர்களுக்கு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளனவா என, ஆய்வு செய்வார். மேலும், கோவில்களில் நடந்துள்ள முறைகேடுகளையும் ஆய்வு செய்து, நீதிமன்றத்திற்கு அறிக்கை வழங்கவுள்ளார்.


கோவிலில் ஆய்வு நடத்தும் மாவட்ட நீதிபதி யார் என்பது ரகசியமாக உள்ளது.யார் எப்படியிருந்தாலும், மாவட்ட நீதிபதியின் ஆய்வுக்கு பின், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள், கோவிலில் அமைய வாய்ப்புள்ளது என, பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். கோவிலில் வேண்டிய வசதிகள்அறநிலையத் துறை பராமரிப்பில் உள்ள கோவில்களில் பக்தர்களுக்கு தேவையான முக்கிய வசதிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.


சுத்தமான குடிநீர், கழிப்பறை, பாதுகாப்பு, கோவில்களில் பக்தர்களிடம் முறையற்ற வசூல் செய்கின்றனரா என்பதை ஆய்வு செய்வார். மேலும், கோவில் பணியாளர்களுக்கு அடையாள அட்டை, பணியாளர்கள் வருகை பதிவேடு, கண்காணிப்பு கேமரா, கோவில்களில் அவசர ஒலி எழுப்பும் வசதி, பிளாஸ்டிக் தடை குறித்தும் ஆய்வு செய்வார். குறிப்பாக, அன்னதானம் குறித்த முழு விபரம், வரவு - செலவு கணக்கு முறையாக உள்ளதா என, மாவட்ட நீதிபதி ஆய்வு செய்ய உள்ளார்.


கோவில்களை ஆய்வு செய்ய வரும், மாவட்ட நீதிபதிக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
அவர்கள் கேட்கும் தகவல்களை கூற வேண்டும். எந்தெந்த கோவில்களில் ஆய்வு செய்தார் என்பதை உடனடியாக, 'மெயில்' அனுப்ப வேண்டும் என, அறநிலையத் துறை செயலர் மூலம் உத்தரவு வந்து உள்ளது. நீதிபதி எப்போது ஆய்வுக்கு வருவர், எந்த கோவிலில் ஆய்வு செய்வார் போன்ற விபரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.


கோவில் நிர்வாக அலுவலர் ஒருவர்

இந்து அறநிலையத் துறை, காஞ்சிபுரம்

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X