| குழந்தையுடன் குளிரில் தவித்த தாய்: எல்.ஐ.சி., ஊழியர்களின் உதவிக்கரம் Dinamalar
குழந்தையுடன் குளிரில் தவித்த தாய்: எல்.ஐ.சி., ஊழியர்களின் உதவிக்கரம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 டிச
2018
07:28

புதுக்கோட்டை: பிறந்து, 18 நாட்களே ஆன கைக்குழந்தையுடன், வெட்டவெளியில், கடும் குளிரில் அவதிப்பட்ட பெண்ணுக்கு, எல்.ஐ.சி., ஊழியர்கள் உதவி செய்து, மனிதாபிமானத்தை வெளிப்படுத்தினர்.


புதுக்கோட்டை அருகே, நெய்வாசல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், முத்துலட்சுமி, 26. இவருக்கும், மதுரை, மேலூரைச் சேர்ந்த பிரசாத்துக்கும், கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. கர்ப்பமடைந்த முத்துலட்சுமி, பிரசவத்துக்காக, தாய் வீடான நெய்வாசல்பட்டிக்கு வந்தார். 'கஜா' புயல் வீசிய, 16ம் தேதி காலை, முத்து லட்சுமிக்கு பிரசவவலி ஏற்பட்டது. ஆட்டோவில் முத்துலெட்சுமி ஏறும்போது, அவர் கண் முன்னே, தங்கியிருந்த வீடு, புயலில் தரைமட்டமானது. புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முத்துலட்சுமிக்கு, ஆப்பரேஷன் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்தில் பிரச்னை இருந்ததால், கர்ப்பப் பையும் அகற்றப்பட்டது. இதனால், கடந்த, 2ம் தேதி தான், வீடு திரும்பினார். வீடு தரைமட்டமானதால், அவரையும், குழந்தையையும், அருகே உள்ள ஆட்டுக் கொட்டகையில், பெற்றோர் தங்க வைத்துள்ளனர். வெட்ட வெளியில் ஆடுகளை கட்ட, தாழ்வாகக் கட்டப்பட்டிருந்த தகரக் கொட்டகையில், சில நாட்களாக, முத்துலட்சுமி தங்கியுள்ளார். நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த, புதுக்கோட்டை, எல்.ஜ.சி., ஊழியர்கள், வெட்ட வெளியில் கடும் குளிரில் நடுங்கிய, தாய், குழந்தையை பார்த்து, அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, மெத்தை, துணிகள், போர்வை, சோலார் விளக்கு, கொசுவத்தி உள்ளிட்ட பொருட்களை வழங்கி, தற்காலிக பாதுகாப்பை ஏற்படுத்தி உள்ளனர். புதுக்கோட்டையில் இருந்து, 5 கி.மீ.,யில் அவதிப்பட்டு வரும் முத்துலட்சுமி மற்றும் குழந்தைக்கு, இதுவரை அரசு அதிகாரிகள் யாரும், எந்த உதவியும் செய்யவில்லை.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X