| பொது தேர்வு மையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! .. பள்ளி மாணவர்கள் வசதிக்காக அனுமதி Dinamalar
பொது தேர்வு மையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! .. பள்ளி மாணவர்கள் வசதிக்காக அனுமதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 டிச
2018
22:23

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மையங்களின் எண்ணிக்கை, கடந்தாண்டை விட, இந்த ஆண்டு, 16 அதிகரிக்கப்பட்டு உள்ளது.


திருவள்ளூர் மாவட்டத்தில், 219 அரசு பள்ளி, 219 மெட்ரிக் பள்ளி உட்பட, மொத்தம், 623 பள்ளிகள் உள்ளன.இப்பள்ளிகளில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஆண்டுதோறும், 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதுகின்றனர்.பிளஸ் 2 தேர்வில், மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் என, 334 பள்ளிகளில், ஆண்டுதோறும், 43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ -- மாணவியர் படிக்கின்றனர். 5,000க்கும் மேற்பட்டோர், தனியார் பயிற்சி மையத்தில் படிக்கின்றனர்.இவர்கள், அரசு பொதுத்தேர்வு எழுதுவதற்காக, கடந்த மார்ச் மாதம் நிலவரப்படி, 10ம் வகுப்புக்கு, 142 தேர்வு மையங்களும், பிளஸ் 2க்கு, 124 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டன.


இந்த நிலையில், மாவட்டத்தில் உள்ள சில பள்ளி மாணவ - மாணவியர், அரசு பொதுத்தேர்வு எழுதுவதற்காக, தாங்கள் பயின்ற பள்ளியில் இருந்து, வேறு பள்ளிக்கு செல்லும் போது, பல்வேறு சிரமம் அடைகின்றனர்.போதிய வாகனம் இல்லாததால், சிரமப்பட்டு தேர்வு அறைக்கு சென்றதும், மன உளைச்சல் ஏற்பட்டு, அவர்களால் தேர்வை சிறப்பாக எழுத முடியவில்லை.


இதையடுத்து, உரிய கட்டமைப்பு வசதிகள் உடைய மற்றும் தேர்வு மையம் அமைப்பதற்கு போதிய மாணவர்களின் எண்ணிக்கை உடைய அரசு மற்றும் தனியார் பள்ளிகள், தேர்வு எழுத தங்கள், மாணவ - மாணவியர் படும் துயரத்தை, பள்ளிக்கல்வித் துறைக்கு மனுவாக அளித்தனர்.அரசு பள்ளிகளைப் பொருத்தவரை, மாவட்ட கல்வி அலுவலர்களும், தனியார் பள்ளிகளில், மெட்ரிக்குலேஷன் பள்ளி கல்வி அலுவலர்களும் ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.


இந்த அறிக்கையின்படி, வரும், மார்ச், 2019ம் ஆண்டு, பொதுத்தேர்வு எழுதும் மையங்களின் எண்ணிக்கையை, தமிழக பள்ளிக்கல்வித் துறை அதிகரித்து உள்ளது.இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், த.ராஜேந்திரன் கூறியதாவது:திருவள்ளூர் வருவாய் மாவட்டத்தில், பள்ளிகளின் கோரிக்கையை பரிசீலனை செய்த கல்வித் துறை அதிகாரிகள், இந்த ஆண்டு கூடுதலாக தேர்வு மையங்களை அதிகரித்து உள்ளனர்.அதன்படி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத, ஒன்பது மையங்களும், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத, ஏழு மையங்களும் அதிகரித்து, ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.இதையடுத்து, 10ம் வகுப்பு, 151 மையங்களிலும், பிளஸ் 2 மாணவர்கள், 131 மையங்களிலும், மார்ச் மாத பொதுத்தேர்வை எழுதவுள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.


எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு?பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, கோரிக்கை விடுக்கப்பட்டது. கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, 16 மையங்களுக்கு மட்டுமே, தேர்வு நடத்தும் அனுமதியை கொடுத்து உள்ளனர். தேர்வுக்கு இன்னும் நான்கு மாதங்கள் இருப்பதால், தேர்வு மையங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X