| குறைவில்லாத வருமானத்துக்கு கோகோ சாகுபடி: மானியத்தில் பயிரிட விவசாயிகளுக்கு 'அட்வைஸ்' Dinamalar
குறைவில்லாத வருமானத்துக்கு கோகோ சாகுபடி: மானியத்தில் பயிரிட விவசாயிகளுக்கு 'அட்வைஸ்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 டிச
2018
23:48

ஆனைமலை:ஆனைமலை ஒன்றிய விவசாயிகள், ஆண்டு முழுவதும் நிலையான வருமானம் பெற, மானியத்தில் கோகோ பயிர் சாகுபடி செய்ய தோட்டக்கலைத்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.ஆனைமலை ஒன்றியத்தில், தென்னை விவசாயம் பிரதானமாக உள்ளது. ஆழியாறு அணை நீர் மற்றும் மழைநீரை பயன்படுத்தி, தென்னையில் ஊடுபயிராக கோகோ சாகுபடி செய்துள்ளனர்.


ஊடுபயிர் சாகுபடியில் களமிறங்கும் விவசாயிகள், முதன்மையாக தேர்ந்தெடுப்பது கோகோ பயிராக உள்ளது. தற்போது, மானியத்தில் கோகோ பயிர் சாகுபடி செய்து வருமானம் ஈட்ட, தோட்டக்கலைத்துறை அழைப்பு விடுத்துள்ளது.தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:ஊடுபயிராக கோகோ சாகுபடி செய்வதால், ஆண்டு முழுவதும், நிலையான வருமானம் கிடைக்கும். மேலும், கோகோ பயிரின் இலை தென்னை மரங்களுக்கு சிறந்த மூடாக்காகவும், மண் புழுக்களுக்கு உணவாகவும் பயன்படுகிறது.கோகோ நாற்று நடவு செய்த, மூன்றாண்டுகளில் காய்ப்புக்கு வரும். ஆண்டுக்கு ஒரு மரத்துக்கு, இரண்டு முதல் மூன்று கிலோ வரை கோகோ விதை கிடைக்கும். ஒரு கிலோ விதை சந்தையில், 200 முதல் 250 ரூபாய் வரையில் விற்பனையாகிறது.ஒரு எக்டருக்கு, 500 நாற்றுகள் நடவு செய்ய வேண்டும்.


செலவு போக ஆண்டுக்கு, 1.5 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக வருமானம் கிடைக்கும். தற்போது ஆனைமலை ஒன்றிய பகுதி விவசாயிகளுக்கு மானியத்தில் கோகோ பயிர் சாகுபடி செய்ய இலக்கு பெறப்பட்டு உள்ளது.ஒரு எக்டருக்கு நாற்றுகளுக்கு, மூவாயிரம் ரூபாய் மற்றும் நடவு, உரம் மற்றும் பராமரிப்பு செலவுக்கு, ஒன்பதாயிரம் என மொத்தம், 12 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.


விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கிக்கணக்கு நகல், இரண்டு புகைப்படம் உள்ளிட்டவையுடன் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகி பதிவு செய்துகொள்ளலாம்.சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீதம் மற்றும் இதர விவசாயிகளுக்கு, 75 சதவீதம் மானியத்தில், சொட்டு நீர் பாசனமும் கோகோ சாகுபடிக்காக அமைத்து தரப்படும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X