கோவை:உக்கடத்தில், ரூ.5.5 கோடியில் சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு, ஆறு மாதமாகியும், மின்வாரியத்தின் தாமதத்தால், செயல்பாட்டை துவக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், உக்கடம் கழிவு நீர் பண்ணை வளாகம் மற்றும் கவுண்டம்பாளையம் உரக்கிடங்கு வளாகத்தில் தலா ரூ.5.5 கோடியில், நாளொன்றுக்கு, தலா ஒரு மெகாவாட் திறனுள்ள சூரிய ஒளி மின்னுற்பத்தி மையம் கட்டப்படுகிறது.
உக்கடத்தில் சூரிய ஒளியை கிரகிக்கும், மேற்கூரை தகடுகள் பொருத்தி, ஆறு மாதங்களாகி விட்டது. கடந்த ஜூன் 25ல் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், சூரிய ஒளி மின்சாரத்தை பெற்றுக்கொள்வதற்கான கட்டமைப்பை, மின்வாரியம் ஏற்படுத்திக் கொடுக்காததால், தாமதமாகி வருகிறது.சாய்பாபா காலனி, பாரதி பார்க் வளாகத்தில், பரீட்சார்த்த முறையில் குப்பை மேலாண்மை மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
இதன் செயல்பாட்டுக்கு ஏற்ப, 64 இடங்களில் உருவாக்க மாநகராட்சி திட்டமிட்டு இருக்கிறது.இத்திட்ட பணிகளை, வெள்ளலுார் குப்பை கிடங்கு கண்காணிப்பு குழு நீதிபதி ஜோதிமணி, நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் பிரகாஷ், மாநகராட்சி கமிஷனர் விஜயகார்த்திகேயன், நகர பொறியாளர் லட்சுமணன் உள்ளிட்டோர் நேற்று ஆய்வு செய்தனர்.தரத்தில் எவ்விதத்திலும் சமரசம் செய்து கொள்ளாமல், பணிகளை விரைந்து செய்வதற்கு, உயரதிகாரிகள் உத்தரவிட்டனர்.