திருப்பூர்:வனத்துக்குள் திருப்பூர் -4 திட்டத்தில், வஞ்சிபாளையம் அருகே, கொங்கு அறக்கட்டளைக்கு சொந்தமான தீரன் சின்னமலை வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.திருப்பூர் மாவட்டத்தின் பசுமை பரப்பளவை அதிகரிக்க செய்யும் வகையில், வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில், மரக்கன்றுகள் நடும் வேள்வி வெற்றிகரமாக நடந்து வருகிறது.
வானம் பார்த்தபடி, தரிசாக கிடந்த நிலங்களில், வண்ண மயில்கள் வாசம் செய்யும் அளவுக்கு, மரக்கன்று நட்டு பராமரிக்கப்படுகிறது.தென்னை மரம், வாழை மரம், பாக்கு மரம் தோப்பாக வளர்க்கப்படுவது போல், மலைவேம்பு, தேக்கு, நாட்டு வேம்பு மரக்கன்று வளர்ப்பதில், விவசாயிகள் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். நான்காவது திட்டத்தில், இலக்கை எட்டிப்பிடிக்கும் வகையில், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கின்றன.
நான்காவது திட்டத்தின், 46வது நிகழ்வு, மங்கலம் அவிநாசி ரோட்டில் நேற்று நடந்தது. கொங்கு அறக்கட்டளைக்கு சொந்தமான, தீரன் சின்னமலை வளாகத்தில், 11 வகையான, 460 மரக்கன்றுகள் நடப்பட்டன. வனத்துக்குள் திருப்பூர் குழுவினரும், அறக்கட்டளை நிர்வாகிகளும், மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.