.கருமத்தம்பட்டி:சோமனுாரில், நெடுஞ்சாலை ஓரத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது; மின்வாரிய அலுவலகத்தின் வழித்தடமும் முழுமையாக மறிக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியினரின் தயவிலுள்ள இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அதிகாரிகள் வேடிக்கை பார்க்கின்றனர்.சோமனுாரிலிருந்து கருமத்தம்பட்டிக்கு இருவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இதில், சோமனுார் பாலம் இறங்கியதும் பவர் ஹவுஸ் கார்னர் உள்ளது. முக்கியமான சந்திப்பான இந்த இடத்தில், பஸ் ஸ்டாப்பை ஒட்டி, ஆறு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.ஒரு ஆவின் பூத், ஆளுங்கட்சியின் பாரம் துாக்கும் தொழிலாளர் சங்கம் (திறந்தவெளி இடம்), அதற்கடுத்து இ.கம்யூ., கொடி மரத்துடன் கூடிய கொட்டகை (மாலையில் தள்ளுவண்டிக்கடை), பஸ் ஸ்டாப்பை ஒட்டி பெட்டிக்கடைகள் என, வரிசையாக ஆறு பேர் ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளனர்.இதையடுத்துள்ள தற்போதைய மின்வாரிய வாயில், அதைத்தாண்டி லாரிகள் ஆக்கிரமிப்பு என, வழிநெடுகிலும் ஆக்கிரமிப்புகள் உள்ளன.கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் வரையில், சோமனுார் - கருமத்தம்பட்டி சாலை ஒருவழிப்பாதையாக இருந்தது. அப்போதும் ஆக்கிரமிப்புகள் இருந்தன. சாலை விரிவாக்கப்பட்ட பின்,இந்த முக்கியமான நான்குமுனை சந்திப்பு நெரிசல் மிகுந்த இடமாக மாறியிருக்கிறது.பஸ் ஸ்டாப் வரும் பயணிகள் நிற்கக்கூட இடமின்றி தவிக்கின்றனர். அவ்வப்போது இந்த சந்திப்பில் கடும் வாகன நெரிசலும் ஏற்பட்டு வருகிறது.மேலும் ஆவின் பூத் மற்றும் அ.தி.மு.க. சங்கம், இ.கம்யூ., கொடிமரம் ஆக்கிரமித்துள்ள இடத்தின் பின் பகுதியிலுள்ள மின்வாரிய அலுவலகத்தின் பிரமாண்ட 'கேட்' ஒன்று பூட்டியே வைக்கப்பட்டுள்ளது.
மின்வாரிய அதிகாரிகளிடம் விசாரித்தால், அலுவலக வளாகத்தில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதால், இந்த வழியை பயன்படுத்த ஏற்பாடு செய்ததாகவும், ஆக்கிரமிப்புகளின் காரணமாக அது இயலவில்லை என்றும் வருத்தத்துடன் கூறினர்.இத்தனைக்கும் கடந்த 2016ம் ஆண்டிலேயே அங்குள்ள ஆவின் பூத்திற்கு உரிமத்தை ரத்து செய்துவிட்டனர். எனினும், ஆளுங்கட்சியின் தயவில் இன்றுவரையில் அக்கடை விதிகளை மீறி செயல்பட்டு வருகிறது.
நிலுவையில் வழக்கு!நெடுஞ்சாலைத்துறை உதவிப்பொறியாளர் சவுந்தர்ராஜன் கூறுகையில், ''பவர் ஹவுஸ் கார்னரில், ஆவின் பூத் ஆக்கிரமிப்பை அகற்றுமாறு நோட்டிஸ் வழங்கியிருந்தோம். சம்பந்தப்பட்டவர் கோர்ட்டில் வழக்குப்போட்டுள்ளார். விசாரணை நடந்து வருகிறது. மற்றவர்களிடம் ஏதும் அறிவுறுத்தவில்லை. சாலை விஸ்தரிப்பு வந்தால், ஆக்கிரமிப்புகளை உடனே அகற்றி விடுவோம். மற்ற ஆக்கிரமிப்புகள் குறித்து புகார் வந்தால் முறையான விசாரணைக்குப் பின் நடவடிக்கை எடுப்போம்,'' என்றார்.