| மருத்துவமனையை தரமுயர்த்த கோரிக்கை: அன்னூரில் இன்று உண்ணாவிரதம்! Dinamalar
மருத்துவமனையை தரமுயர்த்த கோரிக்கை: அன்னூரில் இன்று உண்ணாவிரதம்!
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
03:06

அன்னுார்:அரசு மருத்துவமனையை தரமுயர்த்தக் கோரி, அன்னுாரில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.அன்னுார் அரசு மருத்துவமனைக்கு தினமும், 600 புறநோயாளிகள் வருகின்றனர். பல்வேறு அறுவை சிகிச்சைகளுக்கு ஏராளமானவர்கள் வருகின்றனர். மருத்துவமனையில், டாக்டர்கள், சிறப்பு டாக்டர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் குறைவாக உள்ளனர்.


48 படுக்கைகள் மட்டும் உள்ளதால், கூடுதலாக வருவோரை கோவை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கின்றனர். அங்கு சென்றாலும், உடனே உள் நோயாளியாக அனுமதிக்காமல் நாள் கணக்கில் இழுத்தடிக்கின்றனர்.அன்னுார் அரசு மருத்துவமனையை, 100 படுக்கைகள் கொண்டதாக தரமுயர்த்த வேண்டும். ரத்த வங்கி அமைக்க வேண்டும்.


கூடுதலாக டாக்டர்கள் உட்பட அனைத்து பணியாளர்களும் நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம், கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.எனினும் நடவடிக்கை எடுக்கப்படாததால், இன்று (7ம் தேதி) அன்னுார் ஓதிமலை ரோட்டில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.சங்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவர் மணிகண்டன் கூறுகையில், ''உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி கோரி ஐந்து நாட்களுக்கு முன்பே விண்ணப்பித்தும், அனுமதி தராமல் இழுத்தடிக்கின்றனர். ஆனாலும் திட்டமிட்டபடி உண்ணாவிரத போராட்டம் நடக்கும்,'' என்றார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X