| ரோட்டோர கடைகளில் மாமூல் வாங்கும் போலீஸ்! வைரலாகும் 'வீடியோ'வால் கோவையில் அதிர்ச்சி Dinamalar
ரோட்டோர கடைகளில் மாமூல் வாங்கும் போலீஸ்! வைரலாகும் 'வீடியோ'வால் கோவையில் அதிர்ச்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
03:25

கோவை:கோவையில் ரோட்டோர கடையில் ரோந்து பைக்கில் சென்று, சீருடையில் போலீஸ்காரர் மாமூல் வசூலிக்கும், 'வீடியோ' வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவையில் ரோந்து என்ற பெயரில் தள்ளுவண்டி மற்றும் ரோட்டோர கடைக்காரர்களிடம் போலீசார் மாமூல் வசூலிப்பது தொடர்கதையாக நடந்து வருகிறது. இரவு நேரங்களில் மட்டுமில்லாமல், பகல் நேரத்திலும் சீருடையிலேயே ரோந்து வாகனங்களில் சென்று போலீசார் மாமூல் வசூலித்து வருகின்றனர்.


இதை மெய்ப்பிக்கும் வகையில், தற்போது ஒரு வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.அந்த வீடியோவில், 'சைரன்' ரோந்து பைக்கில்(டி.என். 66 ஜி 0479) சீருடையில் இருக்கும் ஒரு போலீஸ்காரர், ரோட்டோர இளநீர் கடைக்காரரிடம் மாமூல் கேட்கிறார். அவருக்கு, இளநீர் கடைக்காரர் பணத்தை எடுத்து எண்ணி மறைவாக கொடுக்கிறார். அதை போலீஸ்காரர், 'கைநீட்டி' வாங்கி தனது கைக்குள் மறைத்து வைத்து கொண்டு பேசுகிறார்.இவை அனைத்தும் பட்ட பகலில் பொதுமக்கள் முன்னிலையிலேயே அரங்கேறுகிறது. இந்த மாமூல் போலீஸ் வீடியோ கோவை, திருச்சி ரோட்டில் எடுக்கப்பட்டுள்ளது.


இளநீர் கடைக்கு சென்ற பொதுமக்கள் சிலர் போலீஸ்காரரின் வெளிப்படை மாமூலை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர்.இதேபோன்று ரோட்டோர டிபன் கடைகள், தள்ளுவண்டி கடைகள், நடைபாதை கடைக்காரர்களிடம் போலீசார் மாமூல் வசூலிப்பது நடந்து வருகிறது. ராமநாதபுரம் பகுதி மட்டுமில்லாமல் காந்திபுரம், டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, டி.பி.,ரோடு, திருச்சி ரோடு, அவிநாசி ரோடு, பஸ் ஸ்டாண்டுகள் உட்பட கோவை முழுவதும் இந்த மாமூல் கதை தொடர்ந்து நடக்கிறது.ரோட்டின் ஓரத்தில் இளநீர் கடை உள்ளிட்ட கடைகளுக்கு அனுமதி கொடுத்து போலீசார் தினம், வாரம் மற்றும் மாத கணக்கில் மாமூல் வசூலித்து வருகின்றனர். ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார், தங்களுக்குள்ளே எல்லை பிரித்து கொண்டு இந்த மாமூல் வசூலில் ஈடுபடுகின்றனர்.பொதுமக்கள் கூறுகையில், 'மாமூல் வசூல் என்பது போலீசாரின் ஒரு அன்றாட பணியாக மாறிவிட்டது. சட்டவிரோதமாக நடை பாதை, ரோட்டின் ஓரங்களில் கடைகள் அமைக்க அனுமதி கொடுக்கின்றனர். பின், அதற்காக மாமூல் வாங்கி கொள்கின்றனர். கேட்டால், இந்த பங்கு உயரதிகாரிகளுக்கும் தான் செல்கிறது என்கின்றனர். இதை முற்றிலும் தடுத்து நிறுத்தும் வரை, உயரதிகாரிகளுக்கும் மாமூல் செல்கிறது என்பதை மறுக்க முடியாது' என்றனர்.


'டாஸ்மாக்' தனி ரேட்!பொதுவாக இரவு நேரடிபன் கடைகளுக்கு, 50 முதல் 100 ரூபாய் வரை மாமூல் பெறப்படுகிறது. இதேபோன்று ரோட்டோர இளநீர், தள்ளுவண்டி கடைக்காரர்களிடம், 100 ரூபாய் தினசரி மாமூல் வசூலிக்கின்றனர். மேலும், பெரும்பாலான இடங்களில், 24 மணி நேர டாஸ்மாக் கடைகள் இயங்குகின்றன. டாஸ்மாக் கடை அருகே உள்ள பெட்டிக்கடைகளில் இரவு முழுவதும் மது விற்பனை செய்யப்படுகிறது. இதற்கான மாமூல் ரேட், 500 ரூபாய் வரை பெறப்படுகிறது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X