திருப்பூரில் ஊடுருவியுள்ள வங்கதேசத்தினர் குறித்து, பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முழு பின்னணி குறித்த விசாரணையில் போலீசார் இறங்கியுள்ளனர்.
திருப்பூரில், 10 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி,உத்தரபிரதேசம், பீகார், ஒடிசா, மேற்குவங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலத்தவர்களும் அதிகளவில் இங்கு பணியாற்றுகின்றனர். தவிர நைஜீரியா, வங்கதேசம், நேபாளம் வெளிநாட்டினரும் தங்கியுள்ளனர். சமீபத்தில், 'விசா' காலம் முடிந்து திருப்பூரில் தங்கியிருந்த நைஜீரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த அக்டோபரில், போலி ஆதார் கார்டுகளுடன் திருப்பூர், செவந்தாம்பாளையத்தில் தங்கியிருந்த, வங்கதேசத்தைச் சேர்ந்த அலமின், 24, அஸ்ரபுல் இஸ்லாம், 31, பர்கத் உசேன், 18, போலஸ் சந்தரா சொர்க்கர், 28, முகமது ரோனி, 30, ஆகியோரும், இவர்களுக்கு உதவிய முகமது பாபுல் உசேன், 31, மோயின்வார் உசேன், 32, ராபின், 28, ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.விசாரணையில் போலி ஆதார் தயாரித்து உதவிய ராம்சிஷ் வர்மா, சவரிமுத்து, ரவிசங்கர் சிங் கைது செய்யப்பட்டனர். ராம்சிஷ் வர்மாவிடம் இருந்து லேப்-டாப், இரண்டு கருவிழி பதிவு கருவி, கைரேகை பதிவு செய்யயும் கருவி, ஒன்பது லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.இம்முறைகேட்டில் மொத்தம், 11 பேரை ரூரல் போலீசார் கைது செய்த நிலையில், உடந்தையாக இருந்த மேலும் ஒரு பீகார் ஆசாமி மிதுன்ஷா, 27 என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், வங்கதேசத்தினர் இந்திய எல்லைக்குள் ஊடுருவி எவ்வாறு திருப்பூருக்கு வந்தனர் என்பது பற்றிய அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.6,000 ரூபாய் மட்டுமேராம்சிஷ் வர்மா, பீகாரில் ஆதார் கார்டு பதிவு செய்யும் ஏஜன்ட். இவன் அவிநாசி, ரங்கா நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வங்கதேசத்தினருக்கு போலி ஆதார் கார்டு தயாரித்து கொடுத்துள்ளான். வங்கதேசத்தில் இருந்து ஆட்களை, இந்திய எல்லையிலுள்ள ஆற்றை கடந்து வரவைத்து, மேற்கு வங்கம், 24 பர்க்கானஸ் மாவட்டம் வழியாக, இந்தியஎல்லைக்குள் நுழைந்து, திருப்பூருக்கு ரயிலில் அழைத்து வந்துள்ளனர்.
அதன்பின், ஒவ்வொரு நபர்களிடமும் தலா ஆறாயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு, ராம்சிஷ் வர்மா போலி ஆதார் தயாரித்து கொடுத்துள்ளான்.இந்த ஆதார் கார்டைக் கொண்டு இன்சூரன்ஸ் திட்டத்தில் சேர்ந்து, அந்த ஆதாரத்தை வைத்து வங்கி கணக்கு துவக்கி, அதைக்கொண்டு டிரைவிங் லைசென்ஸ், ரேஷன் கார்டு பெற்றுள்ளனர். இந்திய குடிமகனாகவே மாறியுள்ளனர். சிலரிடம் வங்கதேசம் மற்றும் இந்திய பாஸ்போர்ட்கள் இரண்டுமே இருந்துள்ளது போலீசாரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.இக்கும்பலின் வழிகாட்டியாக செயல்பட்டு உதவிய முக்கிய நபர், முகமது பாபுல்உசேன், எட்டு ஆண்டுகளாக திருப்பூரில் தங்கி மளிகைக் கடை நடத்தி, தனது ஆட்களை பனியன் நிறுவனங்களில் வேலைக்கு சேர்த்து வந்துள்ளார்.மேற்குவங்கம் வழியாக ஊடுருவி இந்தியாவுக்குள் வரும் வங்கதேசத்தினர் வேலை தேடித்தான் வந்தனரா அல்லது பின்னணியில் சதித்திட்டம் உள்ளதா என, மத்திய, மாநில உளவுப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ள வங்கதேசத்தினர் உள்பட திருப்பூரில், 5,000 பேருக்கு போலி ஆதார் வழங்கியிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, ஆதார் அதிகாரிகள் முறையாக விசாரணை நடத்தினால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்கின்றனர், போலீசார்.போலீஸ் கிடுக்கிப்பிடிசட்டவிரோதமாக திருப்பூரில் தங்கியிருக்கும் வெளிநாட்டினரை கைது செய்ததும், அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என, ஆதார ஆவணங்களைச் சேகரிக்காமல், வெறுமனே கைது செய்து சிறையில் அடைப்பதும், அவர்கள் எளிதாக ஜாமினில் விடுதலை ஆகிவிடுவதும் வழக்கமாக நடக்கும் சம்பவம்.ஆனால், திருப்பூர் போலீஸ் கமிஷனர் மனோகரன் தற்போது நேரடி விசாரணையில் இறங்கி, அவர்கள் வங்கதேசத்தினர்தான் என்பதற்கான ஆதாரங்களை திரட்டினார்.
கைது செய்யப்பட்ட நபர்களை, வங்கதேசத்திலிருக்கும் அவர்களது குடும்பத்தினருடன் போனில் பேச வைத்து, அங்கியிருந்து அடையாள ஆதார ஆவணங்களை சேகரித்தார்.அதில், அங்குள்ள அவர்களது குடியுரிமைச் சான்றுகளும் அடக்கம். பின்னர் அவற்றையும் விசாரணையில் அறிக்கையில் சேர்க்க உத்தரவிட்டார்.
இதனால், குற்றச்சாட்டிலிருந்து அவர்கள் தப்பிக்கும் வாய்ப்பு மிக மிக குறைவே என்கின்றனர், சட்ட வல்லுனர்கள்.குற்றவாளிகள் தப்ப முடியாதுதிருப்பூர் போலீஸ் கமிஷனர் மனோகரன் கூறியதாவது:திருப்பூரில் தங்கியுள்ள வடமாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டினரை கண்காணித்து வருகிறோம். பனியன் நிறுவன தொழிலாளர்களின் கைரேகையுடன் அடையாள ஆவணங்களையும் பதிவு செய்து வருகிறோம். இதுவரை, 33 ஆயிரம் பேரின் தகவல்களை திரட்டியுள்ளோம்.உரிய ஆவணங்களின்றி யாருக்கும் வேலை தர வேண்டாமென, தொழில் நிறுவனங்களை கேட்டுக்கொண்டுள்ளோம்.
பிற மாநிலங்களில் இருந்து பஸ், ரயில்களில் வருவோர் கண்காணிக்கப்படுகின்றனர். போலி ஆதார் தயாரிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான முகமதுபாபுல் உசேனிடமிருந்து,வருமானவரி தாக்கல் செய்யப்பட்டதற்கான படிவம், பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் பறிமுதல் செய்துள்ளோம். மேலும், சிலரை கைது செய்ய வேண்டியுள்ளது. குற்றத்தில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது.இவ்வாறு, மனோகரன் தெரிவித்தார்.- நமது சிறப்பு நிருபர் -