திருப்பூர்:''இ-- காமர்ஸ் போர்ட்டல் சேவையை பயன்படுத்தி, திருப்பூர் தொழில் துறையினர், ஆடைகளை சந்தைப்படுத்த வேண்டும்,'' என, தபால் துறை மேற்கு மண்டல தலைவர் பேசினார்.வரும் 14ம் தேதி, தபால் துறை 'இ-காமர்ஸ்' போர்ட்டல் சேவை, இயக்கத்தை துவக்க உள்ளது. புதிதாக துவங்க உள்ள இந்த சேவையில், நாடு முழுவதும் உள்ள உற்பத்தியாளர்கள், வர்த்தகர்களை இணைப்பதில், தபால் துறை தீவிரம் காட்டி வருகிறது.
இது குறித்த விளக்க கூட்டம், திருப்பூர், 'சைமா' சங்கத்தில் நேற்று நடந்தது.தபால் துறை மேற்கு மண்டல தலைவர் அம்ரிஷ் உபமன்யு பேசியதாவது:இந்திய தபால் துறை, போர்ட்டல் சேவை துவக்கி, 'இ-காமர்ஸ்' வர்த்தகத்தில் நேரடியாக ஈடுபட உள்ளது. இந்த தளத்தில், பல்வேறு தொழில் துறையினர், தங்கள் தயாரிப்புகளை எளிதாக சந்தைப்படுத்த முடியும். 'ஆர்டர்'களை பெறுவது, பொருட்களை நுகர்வோருக்கு கொண்டு சென்று சேர்ப்பது உள்ளிட்ட அனைத்து வகையான பணிகளையும், தபால் துறை மேற்கொள்ளும்.'புக்கிங்' செய்த பொருள் எங்கிருக்கிறது என, நுகர்வோர் துல்லியமாக அறிந்துகொள்ளும் வகையில், டிராக்கிங் நுட்பங்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன. திருப்பூர் பின்னலாடை துறையினர், வாய்ப்பை பயன்படுத்தி, தபால் துறையின் இ-காமர்ஸ் இணையதளத்தில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும். ஆயத்த ஆடைகளை, குறைந்த செலவில், ஆன்லைனில் வர்த்தகம் செய்து பயன் பெறவேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் கோபிநாதன் உட்பட தபால் துறை அதிகாரிகள், பின்னலாடை துறையினர் பங்கேற்றனர்.
திருப்பூரில் பாஸ்போர்ட் ஆபீஸ்நிகழ்ச்சியில், தபால் துறை மேற்கு மண்டல இயக்குனர் ராமசாமி பேசுகையில், ''திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், தபால் அலுவலகம் இயங்கி வருகிறது. இத்துடன் இணைந்து, விரைவில், பாஸ் போர்ட் அலுவல கம் அமைய உள்ளது. அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. பணி முடிக்கப்பட்டு, வெகு விரைவில், பாஸ்போட் அலுவல கம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும். இதனால், திருப்பூர் பகுதி மக்கள், கோவை செல்ல வேண்டிய நிலை தவிர்க்கப்படும்,'' என்றார்.