| ஏற்றம் இறக்கம் இல்லாத தொழில் வேளாண்மை Dinamalar
ஏற்றம் இறக்கம் இல்லாத தொழில் வேளாண்மை
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
05:14

கலெக்டர் ஜெயகாந்தன்

காரைக்குடி:''ஒவ்வொரு துறையிலும் ஏற்றம் இறக்கம் இருக்கலாம். ஆனால், என்றைக்கும் நிலையான தொழில் விவசாயம் மட்டுமே,'' என கலெக்டர் ஜெயகாந்தன் கூறினார்.மண்வள தின நாளை முன்னிட்டு குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையம்,மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் தோட்டக்கலை பயிர் தொழில் நுட்ப கருத்தரங்கம் அமராவதிபுதுார் கிராமிய பயிற்சி மையத்தில் நடந்தது.நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து கலெக்டர் பேசியதாவது:அனைத்து சாதனை புரட்சிக்கும் மூலதனம் வேளாண்மையும், விவசாயிகளும் தான். நல்ல மண்ணும், நீரும் அமைந்தால் அந்த விவசாயியால் சாதிக்க முடியாதது ஒன்றும் இருக்காது. மண்ணை பாதுகாப்பது தலையாய கடமை. வேளாண்மை துறை ஒவ்வொரு ஆண்டும் மண்ணை பரிசோதனை செய்து அதற்கேற்ப வழிகாட்டுதலை வழங்கி வருகிறது. மண் பரிசோதனை செய்து அதற்கேற்ப பயிர்களை நடவு செய்தால் அதிக மகசூல் பெறலாம். மண்ணை பாதுகாக்க இயற்கை விவசாயம் பயனுள்ளதாகும், என்றார்.இயற்கை முறை விவசாயம் செய்த அரளிக்கோட்டை சீதாலட்சுமிக்கு முன்னோடி விவசாயிக்கான கேடயத்தையும், 20 பயனாளிகளுக்கு மண்வள அட்டையையும், 20 பேருக்கு காய்கறி சாகுபடிக்கான நாற்றுகளையும் வழங்கினார்.குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய தலைவர் செந்துார்குமரன், தோட்டக்கலை துறை துணை இயக்குனர் ராஜேந்திரன், வேளாண்மை இணை இயக்குனர் சேகர், கால்நடை பராமரிப்பு மண்டல இணை இயக்குனர் நவநீத கிருஷ்ணன், கிராமிய பயிற்சி மைய இயக்குனர் அப்பாத்துரை, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் பழனீஸ்வரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X