| கட்டப்பஞ்சாயத்து: வரிச்சியூர் செல்வம் கைது Dinamalar
கட்டப்பஞ்சாயத்து: வரிச்சியூர் செல்வம் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
05:25

மதுரை:சென்னையில் ரூ.3 கோடி கடன் வாங்கி தற்கொலை செய்து கொண்டவரின் குடும்பத்தினரிடம், பணம் பெற்றுத்தருவதாக கூறி பிரபல நிறுவனத்தின் வினியோகஸ்தரிடம், 5 லட்சம் ரூபாய் மற்றும் காரை பறித்த ரவுடி வரிச்சியூர் செல்வம்,51, கைது செய்யப்பட்டார்.சென்னை ஆலப்பாக்கம் மெர்ஸின் தாம்சன்,46. ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனத்தின் சென்னை வினியோகஸ்தர். இவரது 20 ஆண்டுகால நண்பர் முத்துகிருஷ்ணன். இவருக்கு மெர்ஸின் தாம்சன் 3 கோடி ரூபாய் கடன் கொடுத்தார்.


இந்நிலையில் முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டதால், குடும்பத்தினரிடம் கடனை திரும்ப கேட்டுள்ளார். அவர்கள் தரமறுத்ததால், முத்துகிருஷ்ணன் குடும்பத்திற்கு ஏற்கனவே அறிமுகமான பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை, தாம்சன் அணுகினார்.'பணத்தை பெற்றுத்தர 10 லட்சம் ரூபாய் தரவேண்டும்' என செல்வம் கேட்க 5 லட்சம் ரூபாயும், மீதி 5 லட்சம் ரூபாய்க்கு ஈடாக தனது சகோதரரின் 'வால்வோ' காரையும் தாம்சன் கொடுத்தார். ஆனால் பணத்தை பெற்றுத்தராமல் 8 மாதங்களாக செல்வம் ஏமாற்றினார்.


மதுரை அண்ணாநகர் பேக்கரி ஒன்றில் செல்வத்தை சந்தித்து பணம், கார் மற்றும் டாக்குமென்ட்களை கேட்டபோது தாம்சன் தாக்கப்பட்டார். இதுகுறித்து அண்ணாநகர் போலீசில் அவர் புகார் செய்தார். மோசடி, ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி, காயப்படுத்துதல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின்கீழ் நேற்று வரிச்சியூர் செல்வம் கைது செய்யப்பட்டார்.இவர் மீது இதுபோன்ற கட்டப்பஞ்சாயத்து, மோசடி வழக்குகள் பல நிலுவையில் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன் திண்டுக்கல்லில் நடந்த போலீஸ் என்கவுன்டரில் ஒருவர் இறந்தார். அங்கிருந்த செல்வம் சரணடைந்து உயிரை காத்துக்கொண்டார். அண்ணாநகரில் குப்பைத்தொட்டியில் 11 நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுப்பு, விரகனுார் ரிங் ரோட்டில் அ.தி.மு.க., நிர்வாகி கடத்தல் சம்பவங்களில் இவரது பெயர் அடிபட்டது. இவரை குண்டர் சட்டத்திலும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X