சிவகங்கை:ரேஷன் அரிசி வாங்க கூவாணிபட்டியில் இருந்து 5 கி.மீ., துாரமுள்ள இடைய மேலுாருக்கு நடந்து செல்வதோடு, ஆட்டோவில் எடுத்து வர நபருக்கு ரூ.20 வரை செலவாகிறதென மக்கள் புலம்பி தவிக்கின்றனர்.சிவகங்கை அருகே மேல, கீழ கூவாணிபட்டியில் 115 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இதற்கான ரேஷன் கடை 5 கி.மீ., துாரமுள்ள இடையமேலுாரில் உள்ளது. இங்கு இலவச அரிசி, மானிய விலை சர்க்கரை, கோதுமை, மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது. இப்பொருட்களை வாங்க கூவாணிபட்டியை சேர்ந்த பெண்கள் காட்டுப்பகுதி வழியே நடந்து இடையமேலுார் சென்று பொருட்களை வாங்கிய பின், அரிசி மூடையை தலையில் துாக்கி வர முடியாமல் 'ேஷர் ஆட்டோக்களில்' ஒரு நபர் மற்றும் அரிசி மூடைக்கென 20 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே கூவாணிபட்டியில் தனியாக பகுதி நேர ரேஷன் கடை திறக்க வேண்டும் என கிராமத்தினர் பல முறை கலெக்டரை சந்தித்து மனு அளித்துள்ளனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் பகுதி நேர ரேஷன் கடையை திறக்காததால் பெண்கள் அச்சத்துடன் ரேஷன் பொருட்களை வாங்க செல்கின்றனர்.பாதமுத்து,மேலகூவாணிபட்டி: மாதத்திற்கு இரு முறை ரேஷன் பொருள் வாங்குவதற்காக, காட்டு வழியே பெண்கள் ஒன்றாக சேர்ந்து வருகிறோம். மாவட்ட நிர்வாகம் கூவாணிபட்டியில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டும். தற்போது அரசு 'டிவி' ரூம் கட்டடம் செயல்பாடின்றி உள்ளது. அமைச்சர் பாஸ்கரன் முயற்சித்தால் எங்களுக்கு பகுதி நேர ரேஷன் கடை கொண்டு வரலாம்.பொதுவினியோக திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒரு இடத்தில் 180 கார்டுகளுக்கு மேல் இருந்தால், அங்கு பகுதி நேர ரேஷன் கடை திறக்க முடியும். கூவாணிபட்டியில் குறைவான கார்டுகள் மட்டுமே உள்ளன என்றார்.