சிவகங்கை, டிச. 7-
சிவகங்கை நகரில் 37 ஆயிரம் இணைப்புக்கு 2 ஒயர்மேன்களே இருப்பதால், பணிச்சுமையில் தவிக்கின்றனர்.புதிய இணைப்பு கொடுத்தல், டிரான்ஸ்பார்மர்களை பழுதுபார்த்தல், பழுதான மின்கம்பங்களை மாற்றுதல் போன்ற பணிகளை ஒயர்மேன்கள் மேற்கொள்கின்றனர். சிவகங்கை துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட, சிவகங்கை நகர் பிரிவில் குடியிருப்பு, வணிக நிறுவனம் என, 37 ஆயிரம் மின் இணைப்புகள் உள்ளன. இந்த இணைப்புகளை கவனிக்க 9 ஒயர்மேன்கள், அவர்களுக்கு துணையாக 18 உதவியாளர்கள் இருக்க வேண்டும். ஆனால் இருப்பதோ வெறும் 2 ஒயர்மேன்கள் மட்டுமே. ஒரு உதவியாளர்கள் கூட இல்லை. இதனால் பணிச்சுமையில் தவிக்கின்றனர். மேலும் மக்கள் புகார்களை குறித்த நேரத்தில் சரிசெய்ய முடியாமல் தவிக்கின்றனர்.மின் ஊழியர்கள் கூறியதாவது:சிவகங்கை கலெக்டர் வளாகம், மருத்துவ கல்லுாரி, சிட்கோ வளாகம் போன்ற முக்கிய இடங்கள் உள்ளன. அந்த இடங்களுக்கு தடையின்றி மின்சாரம் கொடுக்க வேண்டியுள்ளது. அத்தோடு குடியிருப்புகளில் ஏற்படும் மின்தடையை சரி செய்ய வேண்டும். ஆள் பற்றாக்குறையால் தனியார் மூலம் இப்பணிகளை மேற்கொள்கிறோம். மழை நேரங்களில் மரங்கள் சாய்ந்து மின் தடை ஏற்படுகிறது. ஆள்பற்றாக்குறையால் மரங்களை அகற்றுவதில் சிரமம் உள்ளது. பல இடங்களில் சேதமான மின்கம்பங்களை மாற்ற முடியவில்லை. நகர் பகுதியிலாவது கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும், என்றனர்.