| மகளிர் விடுதிகளை கண்காணிக்க சிறப்புக்குழு:'தினமலர்' செய்தியால் கலெக்டர் உத்தரவு Dinamalar
மகளிர் விடுதிகளை கண்காணிக்க சிறப்புக்குழு:'தினமலர்' செய்தியால் கலெக்டர் உத்தரவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
06:11

கோவை;கோவை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லுாரிகள் மட்டுமல்லாமல், தனியார் நிறுவனங்கள் நடத்தும் அனைத்து விடுதிகளையும் கண்காணிக்க, கலெக்டர் தலைமையில் சமூகநல அலுவலர், போலீஸ் அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.


கோவையில் பெண்கள் விடுதிகள், போதுமான கண்காணிப்பும், பாதுகாப்பும் இன்றி இயங்குவதாக, நமது நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதையடுத்து, நேற்று கலெக்டர் ஹரிஹரன் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் கலெக்டரை தலைவராக கொண்டு, கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டது.


இக்குழு, அரசாணையில் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளின்படி, விடுதிகளை நடத்த வலியுறுத்தும். விதிமுறைகளை சரியாக பின்பற்றுகிறதா என்பதை கண்காணிக்கும். இதன் அடிப்படையில், மாதம்தோறும் சமூகநலத்துறையினர் விடுதிகள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். தேவைப்படும் நேரத்தில் போலீஸ்துறையையும், வருவாய் மற்றும் நீதித்துறையை தொடர்பு கொள்ளவும், சமூகநலத்துறைக்கு கோவை கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.


இது குறித்து, மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் கூறியதாவது:மாவட்டத்தில் சமூக நலத்துறையில் பதிவு செய்யாத விடுதிகள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அரசு நிர்ணயித்துள்ள விதிமுறைக்கு புறம்பாக இயங்கும் விடுதிகளை, 'சீல்' வைக்க முடிவு செய்துள்ளோம். முதற்கட்டமாக ஒவ்வொரு விடுதிகளாக, ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X