தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய சிவகங்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2018
06:36

சிவகங்கை

இந்தியாவில் தொழில் வளர்ச்சி அடைந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. தொழிற்சாலைகள் 36,869 உள்ளன. மேலும் 4,63,836 குறுந்தொழில் நிறுவனங்கள், 61,613 சிறு தொழில் நிறுவனங்கள், 1,498 நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. ஆனால் சிவகங்கை மாவட்டத்திலோ 5 ஆயிரத்திற்கும் குறைவான தொழில் நிறுவனங்களே உள்ளன. 1985 மார்ச் 15ல் உதயமான இம்மாவட்டத்தில், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 13,39,101 பேர் உள்ளனர்.

குறிப்பிடும் படியாக சிவகங்கையில் கிராபைட் தொழிற்சாலை, சிங்கம்புணரியில் கயிறு, மோட்டார் உதிரி பாகங்கள், கடலை மற்றும் தேங்காய் எண்ணெய் தயாரிப்பு தொழில்கள், காரைக்குடி பகுதியில் அரிசி ஆலைகள், டைல்ஸ், செட்டிநாடு பொருட்கள், உணவு தயாரிப்பு தொழில்கள், மானாமதுரையில் செங்கல், மண்பாண்ட தொழிற்சாலைகள், திருப்புவனத்தில் செங்கல், பிளேஆஸ் தயாரிப்பு தொழில்கள் உள்ளன.

சிட்கோ


சிவகங்கை மாவட்டத்தில் 3 சிட்கோ தொழிற்பேட்டைகள் உள்ளன. 1966ல் சிவகங்கையில் 70.61 ஏக்கரில், காரைக்குடியில் 180.19 ஏக்கரில் தொழிற்பேட்டைகள் ஆரம்பிக்கப்பட்டன. 1993 ல் கிருங்காகோட்டையில் 21.85 ஏக்கரில் துவங்கப்பட்ட இந்த தொழிற்பேட்டைகளில் வாட்டர் பாட்டில், பேப்ரிகேஷன், டிரம், ஸ்டீல், மர சாமான்கள், குங்கும டப்பா, சீப்பு, பேக்கரி, டைல்ஸ், ஜிப், துணிப்பை, ஆயத்த ஆடை தயாரிப்பு தொழில்கள் உள்ளன.

மேலும் ஆங்காங்கே பேவர் பிளாக், ஹாலோ பிளாக் கற்கள் தயாரிக்கப்படுகின்றன. இருக்கும் தொழில் நிறுவனங்களும் குறைந்த எண்ணிக்கையில் செயல்படுகின்றன. இதை தவிர சொல்லும்படியான தொழில் இல்லை.

சிவகங்கை, காரைக்குடியில் அறிவிக்கப்பட்ட சிப்காட் பயன்பாட்டிற்கு வரவில்லை. கிராபைட் உபத்தொழிற்சாலை முயற்சியும் தோல்வியில் உள்ளது. இதனால் மாவட்ட மக்கள் விவசாயத்தையே பிரதானமாக நம்பியுள்ளனர். பலர் வேலை தேடி வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.

இதனால் பின்தங்கிய மாவட்டமாகவே சிவகங்கை உள்ளது. மக்கள் பிரதிநிதிகள் முதலீட்டாளர்களை ஈர்த்து, தொழில் வளத்தை மேம்படுத்த வேண்டுமென, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

-

ஏராளமான வாய்ப்பு இருக்கு


மாவட்டத் தொழில்மைய பொதுமேலாளர் கணேசன்

கூறியதாவது:

ஆடு, மாடு, கோழி வளர்ப்பு, விவசாயம், வாகனங்கள் வாங்க, சிவப்பு நிற தொழிற்சாலைகள் துவங்க அரசு மானியத் திட்டங்கள் இல்லை. மற்ற தொழில்கள் துவங்க 3 விதமான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. நீட்ஸ் திட்டத்தில் பட்டதாரிகள் 5 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை கடனுதவி பெறலாம். திட்ட மதிப்பில் 25 சதவீதம் மானியம் தரப்படும்.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினை உருவாக்கும் திட்டத்தில் உற்பத்தி தொழில்களுக்கு 10 லட்சம் ரூபாய், சேவைக்கு 3 லட்சம், வியாபாரத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் கடனுதவி வழங்கப்படும். எட்டாம் வகுப்பு முடித்தோர் விண்ணப்பிக்கலாம்.

மானியம் 25சதவீதம் (அ) அதிகபட்சம் 1.25 லட்சம் ரூபாய் வரை தரப்படும். பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் உற்பத்தி தொழில்களுக்கு 25 லட்சம் ரூபாய், சேவை தொழில்களுக்கு 10 லட்சம் ரூபாய் கடனுதவி வழங்கப்படும்.

எட்டாம் வகுப்பு முடித்தோர் விண்ணப்பிக்கலாம். மானியம் 15 முதல் 35 சதவீதம் வரை தரப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 5 சதவீதம் மானியம் தரப்படும்,

என்றார்.

-

இழுபறியில் ஸ்பைசஸ் பார்க்

மத்திய தொழில் வர்த்தக அமைச்சகம் சார்பில் மாநிலத்திற்கு ஒரு 'ஸ்பைசஸ் பார்க்' துவங்கப்பட்டது. தமிழகத்தில் மிளகாய், மஞ்சள் போன்ற வாசனை பொருட்களுக்கான 'ஸ்பைசஸ் பார்க்' அமைக்க 2008 ல் சிவகங்கையில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்காக 73 ஏக்கர் நிலத்தை 'ஸ்பைசஸ் போர்டிடம்' மாநில அரசு வழங்கியது. 23 ஏக்கரில் 28 கோடி ரூபாயில் பல ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட 2 சேமிப்பு கோடவுன்கள், சீதோஷ்ண நிலை கட்டுப்பாட்டு அறை, சுத்தம் செய்து தரம் பிரிக்கும் இயந்திரங்கள் அமைக்கப்பட்டன.

மேலும் நிறுவனங்கள் கோடவுன் அமைக்க 50 ஏக்கர் தனியாக ஒதுக்கப்பட்டது. இந்த பூங்காவை 2013 ல் அப்போதைய மத்திய அமைச்சர் சிதம்பரம் திறந்து வைத்தார்.

இந்த பூங்கா மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என, தெரிவிக்கப்பட்டது. ஆனால் 'ஸ்பைசஸ் பார்க்கிற்கு' மாநில நகரமைப்பு இயக்குனரக அங்கீகாரம் இல்லாததால், நிறுவனங்கள் கோடவுன்கள் அமைக்க தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து 'ஸ்பைசஸ்' போர்டு சார்பில் அங்கீகாரம் கேட்டு 2016 ஜனவரியில் மாநில நகரமைப்பு இயக்குனரகத்திற்கு கோப்பு அனுப்பப்பட்டது. மத்திய அரசு நிறுவனம் என்பதால் அங்கீகாரம் தர தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்தது.

கடந்த 2016 ஆகஸ்டில் ஆறு பேர் அடங்கிய அ.தி.மு.க., எம்.பி.,க்கள் குழு 'பார்க்கை' பார்வையிட்டது. மேலும் விரைவில் அங்கீகாரம் பெற்று தருவதாகவும் உறுதியளித்தது. அதன்பின் இரண்டு முறை கோப்புகள் அனுப்பியும், மாநில அரசு அங்கீகாரம் தர மறுத்து விட்டது. இதனால் கோடவுன்களுக்காக பல லட்சம் ரூபாய் செலவில் 'பிளாட்களை' வாங்கிய 30 ஏற்றுமதி நிறுவனத்தினரும் அதிருப்தி அடைந்தனர்.

அவர்கள் 'பிளாட்களை' திருப்பி ஒப்படைக்க தயாராகி வருகின்றனர். இதனால் 28 கோடி ரூபாயிலான கட்டடங்கள், இயந்திரங்கள் வீணாகி வருகிறது.

-

5 ஆயிரம் பேர் வேலையிழப்பு

மானாமதுரையில் 300 ஏக்கரில் 1982 ல் சிப்காட் தொழிற்பேட்டை

துவங்கப்பட்டது. மதுரா சிமென்ட்ஸ், பாண்டியன் கிராபைட்,

டிராக்டர் பாடி பில்டிங், பி.வி.சி., பைப் கம்பெனிகள், வளைகுடா நாடுகளில் கடலுக்கு அடியில் பதிக்கப்படும் ராட்சத குழாய்கள், விவசாய இடுபொருள் கருவிகள் தயாரிப்பு என, 50 க்கும் மேற்பட்ட கம்பெனிகள் துவக்கப்பட்டன. பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்றனர்.

போக்குவரத்து வசதி இல்லாதது; மூலப்பொருட்கள் வரத்து குறைவு, அரசு ஒத்துழைப்பு இல்லாததால் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டன.

சில ஆண்டுகளுக்கு முன், 1800 கோடி ரூபாயில் துவங்கப்பட்ட வீடியோகான் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனமும் மூடப்பட்டது.

பல நிறுவனங்கள் மூடப்பட்டதால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலையிழந்தனர்.


கைவிட்ட சிப்காட் திட்டம்

'தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த சிவகங்கை, காரைக்குடியில் சிப்காட் தொழிற்பூங்கா துவங்கப்படும்,' என 2013 ல் 110 விதியின் கீழ் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். 'மேலும் தொழில் துவங்குவோருக்கு 50 சதவீத மானியத்தில் நிலம் ஒதுக்கப்படும். நிலம் பத்திரப்பதிவுக்கான முத்திரைத்தாள் கட்டணத்தில் 100 சதவீதம் விலக்கு அளிக்கப்படும். மூலதன மானியம் 2 சதவீதம் அளிக்கப்படும். 10 கோடி ரூபாய்க்கு மேல் தொழில் துவங்கினால் வரிச் சலுகை அளிக்கப்படும்,' என தெரிவித்தார்.

அதன்படி தொழிற்பூங்காக்கள் அமைக்க சிவகங்கை அருகே அரசனுாரில் 1,451.28 ஏக்கர், காரைக்குடி அருகே திருவேலங்குடி, கழனிவாசல் பகுதியில் 1,253.24 ஏக்கர் கையகப்படுத்தும் பணி துவங்கியது. இதற்காக ஆறு தாசில்தார்கள் தலைமையில் ஆறு அலகுகள் ஏற்படுத்தப்பட்டு, 56 ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர்.

அரசனுார் தொழிற்பூங்காவிற்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, மதிப்பீடு பணி முடிவடைந்தது. அதேபோல் திருவேலங்குடி, கழனிவாசல் பகுதியில் நிலம் கையகப்படுத்தும் பணி நடந்தது.

அரசியல் நெருக்கடி, நிதி பற்றாக்குறையால் சிவகங்கை, காரைக்குடி தொழிற்பூங்கா அமைக்கும் பணியை கைவிடவும், தேவைப்படும்போது தொழில் நிறுவனங்களுக்கு நிலங்களை கையகப்படுத்தி கொடுக்கவும் சிப்காட் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கான பரிந்துரையை

அரசுக்கு செய்தது.

-

அரசியல்வாதிகளின்

வாய்ஜாலம்


கிராபைட் மூலம் பென்சில், உராய்வு தடுப்பான்கள், தங்கம், இரும்பு போன்ற உலோகங்களை உருக்கும் உலை (குருசுபுல்), ராக்கெட், விமானத்தில் அதிக வெப்பநிலை தாங்கும் பொருட்கள் தயாரிக்க முடியும். அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த கிராபைட் கனிமம் சிவகங்கை மாவட்டத்தில் அதிகளவில் கிடைக்கிறது. இவை சிவகங்கை அருகே கோமாளிப்பட்டியில் இருந்து பூவந்தி வரை பல கி.மீ., பரப்பில் 3 லட்சம் டன் இருப்பதாக தேசிய

கனிமவள நிபுணர்கள் தெரிவித்தனர்.

கிராபைட் ஆலைக்காக அரசு கனிம நிறுவனம் 1971 ல் 900 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது. 1988ல் அடிக்கல் நாட்டப்பட்டு 1994 ல் ஆலை செயல்பட துவங்கியது. தற்போது இங்கு 168 பேர் பணிபுரிகின்றனர். மறைமுகமாக 200 பேர் பயன்பெறுகின்றனர். உபத்தொழிற்சாலைகள் துவங்கப்படாததால் வெட்டி எடுக்கப்படும் கிராபைட் கல் ஆந்திரா, ஒடிசா மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. கிராபைட்டை பயன்படுத்தி ஆந்திரா ராஜமுந்திரியில் ஏராளமான குடிசைத் தொழில்கள் நடக்கின்றன. அதேபோல் சிவகங்கை மாவட்டத்திலும் உபத்தொழில்கள் துவங்க வேண்டுமென, பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றன.

ஆனால் ஒவ்வொரு சட்டசபை,லோக்சபா தேர்தலின் போது 'நாங்கள் வெற்றி பெற்றால்' சிவகங்கை கிராபைட் தொழிற்சலையை மேம்படுத்துவோம் என, அரசியல் கட்சியினர் வாக்குறுதி மட்டும் அளித்து வருகின்றன. தற்போது ஆலை உற்பத்தியை 60 ஆயிரத்தில் இருந்து 1.05 லட்சம் டன்னாக உயர்த்த கனிம நிறுவனம் முடிவு செய்தது. இதற்காக ஆலையை மேலும் 236.85 எக்டேரில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டது. மக்கள் எதிர்ப்பால் திட்டம் கிடப்பில் உள்ளது. 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X