ராமநாதபுரம்:ராமநாதபுரம் ஆயுதப்படை போலீஸ் நஸ்ரியாவை டார்ச்சர்
செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் எஸ்.பி.,யிடம் மனு கொடுத்தனர்.
ஜனநாயக மாதர்
சங்கம் அளித்த புகார் மனுவில் கூறியதாவது: ராமநாதபுரம் ஆயுதப்படை போலீஸ் நஸ்ரியா எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவர் வெளியிட்ட வாட்ஸ் அப் வீடியோவில் 'இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம்,
ஜெயசீலன் எஸ்.எஸ்.ஐ., ஏட்டு பார்த்திபன்
ஆகியோர் தொல்லை
காரணமாகவே
தற்கொலை செய்து
கொள்வதாக தெரிவித்து
உள்ளார்,'
அவரை ஜனநாயக மாதர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி,
ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் சந்தித்தோம்.
நஸ்ரியா கூறுகையில், 'திருச்சி காவலர் பயிற்சி பள்ளியில் அதிகாரிகள் பாலியல் தொல்லை காரணமாக, புகார் அளித்தேன், மதுரை பயிற்சிப்பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டு பயிற்சியை நிறைவு செய்தேன். ராமநாதபுரம் ஆயுதப்படையில் பணியில் சேர்ந்த பின்பு இங்கும் பாலியல் ரீதியான வார்த்தைகளில் சொல்லாடல், ஜாதியின் பெயரால் இழிவுபடுத்தி பேசி, தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தனர்.
நவ., 7 ல் எஸ்.பி., யிடம் முத்துராமலிங்கம், ஜெயசீலன், பார்த்திபன் மீது புகார் தெரிவித்தேன். இதன் மீது விசாரணை நடத்தப்படாததால், பணிக்கு செல்ல இயலவில்லை. 23 நாட்கள் கழித்து ஆயுதப்படை டி.எஸ்.பி., மூவரையும் கண்டித்து அனுப்பிவிட்டு, பணிக்கு வராத என்மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக தெரிவித்தார்,'என்றார்.
இதன் காரணமாகவே மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றார். நஸ்ரியா வழங்கிய புகாரின் பேரில் தற்கொலைக்கு துாண்டும் அளவில் தொல்லை கொடுத்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.