ஓமலூர்: விமான நிலைய விரிவாக்க விவகாரத்தில், விவசாயிகள், ரியல் எஸ்டேட் வீட்டு மனை பிரிவுகளை கேட்டு, தாசில்தாரிடம் வலியுறுத்தினர்.
சேலம், விமான நிலைய விரிவாக்கத்துக்கு, பொட்டியபுரம், தும்பிப்பாடி, காமலாபுரம், சிக்கனம்பட்டி கிராமங்களில், 570 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. அதற்கு, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பின், சிக்கனம்பட்டி, குப்பூர் விவசாயிகள் பலர், தாங்களாகவே முன்வந்து, நிலங்களை ஒப்படைத்தனர். பொட்டியபுரம், காமலாபுரம், சிக்கனம்பட்டியில், நில அளவீடு முடிந்த நிலையில், தும்பிப்பாடி விவசாயிகள், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், கலெக்டர் ரோகிணி உத்தரவால், காடையாம்பட்டி தாசில்தார் மகேஸ்வரி, நேற்று மாலை, 4:00 மணிக்கு, தும்பிப்பாடி சமுதாயக்கூடத்தில், விவசாயிகளை சந்தித்து, கருத்துகளை கேட்டறிந்தார். அதில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ளதைவிட, நிலத்தின் வழிகாட்டி மதிப்பை அதிகரித்து வழங்கவேண்டும்; கரடு பகுதியில் மாற்று இடம் வழங்குவதை தவிர்த்து, மக்கள் நடமாட்டமுள்ள பகுதி மற்றும் ரியல் எஸ்டேட் வீட்டு மனை பிரிவுகளை வழங்க வேண்டும். குறிப்பாக, சேலம், ஓமலூர் நகர் பகுதியில், வீட்டுமனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை, விவசாயிகள் வலியுறுத்தினர். இதுகுறித்து, கலெக்டரிடம் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக, மகேஸ்வரி உறுதியளித்தார்.