சேலம்: நூதன முறையில் மோசடியில் ஈடுபடும் கும்பலிடம் உஷாராக இருக்க, போலீஸ் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை: சமூக விரோதிகள், தங்களுக்கு முக்கிய பதவிகளில் உள்ளவர்களை தெரியும். அவர்களிடம், உதவியாளராக உள்ளதாக, மக்களை நம்பவைத்து, அரசு வேலை வாங்கி தருவதாக உறுதியளிக்கின்றனர். முடியாத காரியங்களை செய்து தருவதாக வாக்குறுதி கொடுத்து, பல தருணங்களில், மக்களிடமிருந்து, பெருந் தொகையை பெற்றுக்கொண்டு ஏமாற்றும் சம்பவங்கள் நடக்கின்றன. சேலத்தில், நகைக்கடை உரிமையாளர் ஒருவர் மற்றும் பத்திரிகை நிருபர்கள் எனக்கூறி மூவர், மக்களிடம் மோசடி செய்துள்ளனர். மல்டிலெவல் மார்க்கெட்டிங் முறை, மருந்து பொருட்கள் விற்பனை பெயரில் மோசடிகள் நடக்கின்றன. மேலும், சிறு தொகை செலுத்தினால், பெரிய தொகை, அதற்குண்டான பொருட்கள் தங்கமாக கிடைக்கும் என, ஒரு கும்பல் பொய் தகவலை பரப்பி, வசூலில் ஈடுபடுகிறது. ஏமாற்று பேர்வழிகள், முக்கிய பிரமுகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை காட்டி, மக்களை ஏமாற்றுகின்றன. அதனால், மக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டு, சமூக விரோத கும்பல்களின் திட்டங்களுக்கு துணை போக வேண்டாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.