சேலம்: அரசு வேலை வாங்கி தருவதாக, ஆறு லட்சம் ரூபாய் மோசடி செய்த, தனியார் போட்டித்தேர்வு பயிற்சி மைய உரிமையாளரை, போலீசார் கைது செய்தனர்.
சேலம், முத்துநாயக்கன்பட்டியைச் சேர்ந்த, சீனிவாசன் மகன் பிரபாகரன், 43; கொல்லப்பட்டியில், 'ஸ்டார் அகாடமி' என்ற பெயரில் பயிற்சி மையத்தை தொடங்கி, அரசு தேர்வுக்கு பயிற்சியளித்து வந்தார். இவரை தொடர்பு கொண்ட, வீராணம், வலசையூர், பெரியசாமி மனைவி புஷ்பா, 43; தன் மகனுக்கு, அரசு வேலை வாங்கி தர கோரிக்கை விடுத்தார். அதற்கு, 'ஆறு லட்சம் ரூபாய் கொடுத்தால், வேலை உறுதி' என, பிரபாகரன் தெரிவித்துள்ளார். அதை நம்பி, ஆறு லட்சம் ரூபாயை, புஷ்பா கொடுத்தார். ஆனால், வேலை வாங்கி தராததோடு, பணத்தையும் திரும்ப கொடுக்கவில்லை. இதுகுறித்து கேட்டபோது, பிரபாகரன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து, புஷ்பா அளித்த புகார்படி, இரும்பாலை போலீசார், நேற்று முன்தினம், பிரபாகரனை கைது செய்தனர்.