| அதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல் Dinamalar
அதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
09:42

பிளாஸ்டிக் கழிவு குவிப்பால் சிரமம்: பள்ளிபாளையம் ஒன்றியம், ஒட்டமெத்தையில் பொதுக் கழிப்பிடம் செல்லும் சாலையோரத்தில், திறந்தவெளியில் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இது, பல மாதங்களாக அள்ளப்படாமல் உள்ளன. அவற்றை நாய்கள் கிளறுவதால், சாலையின் மையப்பகுதி வரை வந்து விட்டது. மழை பெய்தால், துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளும், மக்களும் அவதிப்படுகின்றனர். சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படுமா?


கம்பி வளையம் அமைக்கப்படுமா? மல்லசமுத்திரம் ஒன்றியம், பருத்திபள்ளி அங்கன்வாடி மையம் அருகே, திறந்தவெளி பொதுக் கிணறு உள்ளது. குழந்தைகள் அடிக்கடி இப்பகுதிக்கு விளையாட செல்கின்றனர். அவர்கள், கிணற்றை எட்டிப் பார்த்தால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. பெற்றோர், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கிணற்றில் கம்பி வளையம் அமைக்கக் கோரி, பகுதியினர் பலமுறை பஞ்சாயத்து நிர்வாகத்தில் முறையிட்டும், இதுவரை நடவடிக்கை எதும் இல்லை.


நிழற்கூடத்தில் அட்டகாசம்: பள்ளிபாளையம் அடுத்த, ஆவத்திபாளையம் பஸ் நிறுத்தத்துக்கு தினமும் ஏராளமான மக்கள், மாணவ, மாணவியர் வருகின்றனர். இங்குள்ள நிழற்கூடத்தில், குடிமகன்கள் போதையில் அரை நிர்வாணத்துடன் படுத்துள்ளனர். இருக்கையையும் ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். பயணிகள் அவதிப்படுகின்றனர். நிழற்கூடத்திற்கு வருவதற்கே தயக்கமடைகின்றனர். சாலையோரத்தில் திறந்தவெளியில் தான், பஸ்சுக்கு காத்திருக்கின்றனர். குடிமகன்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.


திறந்தவெளி கிணறு; விபத்து அச்சம்: எலச்சிபாளையம் ஒன்றியம், கொன்னையார் பஞ்., சத்யாநகரில் சாலையோரத்தில், 30 அடி ஆழ திறந்தவெளி கிணறு உள்ளது. இந்த இடத்தில், போதிய வெளிச்சம் இல்லாததால், இரவுநேரங்களில் இவ்வழியாக வருவோர், கிணற்றுக்குள் விழுந்து காயங்கள் ஏற்பட்டு அவதிக்குள்ளாகின்றனர். அதுமட்டுமல்லாது, குழந்தைகள் விளையாடும்போது, உள்ளே விழுந்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் பெற்றோர், பகுதியினர் தவித்து வருகின்றனர்.


சாலை பள்ளம் சீரமைக்கணும்! குமாரபாளையம், அம்மன் நகர் புறவழிச்சாலையை இணைக்கும் வழியில் பெரிய பள்ளம் உள்ளது. மக்கள் அதன் முன், இரண்டு பெரிய கற்களை வைத்துள்ளனர். தொழிற்சாலைகள் உள்ளதால், இச்சாலை வழியாக வாகன போக்குவரத்து அதிகம். மினிலாரி, வேன் உள்ளிட்ட வாகனங்கள் தடுமாறி, விபத்தை சந்திக்கும் நிலை உள்ளது. பெரிய பாதிப்பு ஏற்படும் முன் இதை மூட வேண்டும். இதுகுறித்து, பலமுறை புகார் கொடுத்தும், நடவடிக்கை இல்லை.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X