| கல்வராயன் மலை முட்டல் ஏரி நிரம்பியது: விவசாயிகளின் மனம் குளிர்ந்தது Dinamalar
கல்வராயன் மலை முட்டல் ஏரி நிரம்பியது: விவசாயிகளின் மனம் குளிர்ந்தது
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
12:08

ஆத்தூர்: கல்வராயன்மலை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், முட்டல் ஏரி நிரம்பி, மதகுகள் வழியாக, உபரிநீர் வெளியேறுகிறது. இதனால், பாசன விவசாயிகளின் மனம் குளிர்ந்துள்ளது.


சேலம் மாவட்டம், ஆத்தூர் அடுத்த, பெரிய மற்றும் சின்ன கல்வராயன் மலை பகுதியில் கனமழையால், கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மாயம்பாடி, கல்படை, மட்டப்பட்டு, மல்லிகைபாடி ஆறுகள் வழியாக, கச்சிராப்பாளையம், கோமுகி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. கல்வராயன்மலையிலிருந்து, பட்டிமேடு உள்ளிட்ட ஆறுகளில் தொடர்ந்து நீர் வருவதால், ஆணைவாரி நீர்வீழ்ச்சியில், அதிகளவில் தண்ணீர் கொட்டுகிறது. பெரிய, சின்ன கல்ராயன்மலை இணையும் இடத்தில், 300 ஏக்கர் பரப்பளவிலுள்ள, முட்டல் ஏரிக்கு, நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது, ஏரி நிரம்பி, மதகுகள், தடுப்பணை வழியாக, உபரிநீர் வெளியேறுகிறது. ஆத்தூர் நகராட்சியின் குடிநீர் ஆதாரமாக உள்ள ஏரி நிரம்பியதால், குடிநீர் நீரேற்று நிலைய கிணற்றிலிருந்து, அதிகளவில் தண்ணீர் எடுக்கப்படுகிறது.


முட்டல் ஏரி பாசன விவசாயிகள் கூறியதாவது: ஏரியையொட்டி, 2,000 ஏக்கர் நீர் பிடிப்பு பகுதி இருந்தபோதும், 200 ஏக்கர் மட்டுமே நீர் தேங்கி நிற்கிறது. 1967ல், அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த, முன்னாள் முதல்வர் கருணாநிதி, முட்டல் அணை கட்டுவதாக உறுதியளித்தார். தற்போது வரை, அதற்கான முயற்சி எடுக்கப்படவில்லை. 60 ஏக்கர் நீர் பிடிப்பு பகுதி, பொதுப்பணித்துறை, மற்ற பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இத்துறைகள் ஒன்றிணைந்து, ஏரியை ஆழப்படுத்தி, கரையை வலுப்படுத்தினால், ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசன வசதி பெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தடை நீட்டிப்பு: கடந்த, 2016 முதல், முட்டல் ஏரி, ஆணைவாரி நீர்வீழ்ச்சியில், 'சூழல் சுற்றுலா' திட்டம் தொடங்கி, படகு சவாரி, குடில் வசதி செய்யப்பட்டது. இரு மாதங்களுக்கு முன் பெய்த மழையால், நீர்வீழ்ச்சி வழிப்பாதையில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. பாதையிலுள்ள இரு ஆறுகளையும் கடந்து செல்ல முடியாததால், சுற்றுலா பயணிகள் செல்ல, வனத்துறை தடை விதித்துள்ளது. மழைக்காலம் முடிந்து, நீர்வீழ்ச்சி பாதை சீரமைப்பு உள்ளிட்ட பணிக்கு பின், சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர் என, வனத்துறையினர் தெரிவித்தனர்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X