உடுமலை:சின்னவெங்காய சாகுபடியில், பயிர்பாதுகாப்புக்கு வேம்பு உட்பட பொருட்களை பயன்படுத்தினால், சாகுபடி செலவை வெகுவாக குறைக்கலாம்.உடுமலை சுற்றுப்பகுதியில், கிணற்றுப்பாசனத்துக்கு, சின்னவெங்காயம் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. சாகுபடி செலவு பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், விளைச்சல் குறைவு மற்றும் விலை வீழ்ச்சியால், விவசாயிகள் அதிகம் பாதிக்கின்றனர்.
இந்நிலையில், சாகுபடி செலவை குறைத்து, விளைச்சலை அதிகரிக்க, இயற்கை வேளாண் முறைகளை சில விவசாயிகள் பின்பற்ற துவங்கியுள்ளனர்.விவசாயிகள் கூறியதாவது: சின்னவெங்காய சாகுபடியில், புதிய உத்திகளை விவசாயிகள் கையாள வேண்டும். அதிக மருந்து தெளிக்காமல், வேம்பு சார்ந்த பயிர் பாதுகாப்பு மருந்துகளை பயன்படுத்தலாம். அடியுரமாக வேப்பம்புண்ணாக்கு, மண்புழு உரம், நுண்ணீர் பாசனம், ஊடுபயிர் சாகுபடி ஆகியவையும் நன்மையளிக்கும். ஆமணக்கு செடிகளை வரப்புகளில் பயிரிட்டு, பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம். விளைநிலங்களில் விளக்கு பொறி வைத்து, பூச்சிகளை கவர்ந்திழுத்து அழிக்கலாம். தைப்பட்டத்தில் நாற்று விட்டு, 40 நாள் பராமரித்து, விளைநிலங்களில் நடவு செய்யலாம். இவ்வாறு, கூறினர்.