மதுரை:மதுரையில் மாட்டு சாணத்தில் இயற்கை உரம் தயாரிக்கின்றனர். இவற்றை டன்
கணக்கில் கேரள தேயிலை எஸ்டேட் களுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.
விவசாயிகள் பலர் இயற்கை விவசாயத்திற்கு மாறி பழமையான நாட்டு ரக பயிர்களை பயிரிட விரும்பி ரசாயன உரங்களுக்கு பதில் வயல்களில் மாடுகளை 'கிடைய்' அமர்த்தி வருகின்றனர். மாலை 5:00 மணி முதல் காலை 7:00 மணி வரை வயல்களில் கிடைய் இருக்கும் மாடுகள் இடும் சாணம், சிறுநீர் மண்ணில் நுண்ணுாட்ட சத்துக்கள் பெருக்கவும், மண் புழுக்கள் உற்பத்தியாகவும் வழி வகுக்கிறது.இதனால் மண்வளம் ஏற்படுகிறது. பூச்சிகளை கட்டுப்படுத்த விளக்குப்பொறி, பஞ்சகவ்யம், வேப்ப எண்ணெய் உள்ளிட்ட இயற்கை முறைகளையும் விவசாயிகள் கையாளுகின்றனர்.
சாணம் ஏற்றுமதி
மதுரை மணப்பட்டி கண்ணன்: மணப்பட்டி, இளமனுார், மிளகனுார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மேய்ச்சலுக்கு ஏற்ற பகுதிகளுக்கு 2,000 மாடுகளை அழைத்து செல்வோம். அன்று இரவு தேவைப்படுவோரின் வயல்களில் கிடைய் அமர்த்துவோம். குறிப்பிட்ட தொகை வருமானம் கிடைக்கும். மாட்டு சாணத்தை உலர வைத்து கேரளா தேயிலை எஸ்டேட்டுகளுக்கு வாரந்தோறும் டன் கணக்கில் அனுப்புகிறோம். 50 கிலோ கொண்ட மூடை 75 ரூபாய்க்கு விற்கிறோம் என்றார்.
குறையும் மாடுகள்
நாகமலை சுப்பிரமணி: விளை நிலங்கள் பிளாட்டுகள் ஆனதால் கிடைய் மாடுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இயற்கை உரமான மக்க வைத்த சாணத்தை அதிகளவு கொள்முதல் செய்யும் கேரள விவசாயிகள் பாராட்டுக்குரியவர்கள். இந்த விழிப்புணர்வு தமிழக விவசாயிகளிடம் குறைந்துள்ளது என்றார்.
மண் வளம் ஏற்றது
சிவகங்கை மிளகனுார் கண்ணன்: பயிர்களுக்கு தலைச்சத்து, மணிச்சத்து, நுண்ணுாட்டச்சத்து அவசியம். இதை ஒருங்கிணைத்து உருவாக்குவது மக்க வைத்த சாணம். முன்பு மண்ணில் எதை விதைத்தாலும் விளையும். இன்று மண் சத்து பரிசோதனை செய்ய சொல்கின்றனர். பல ஆண்டுகளாக ரசாயன உரங்களை பயன்படுத்தியதால் மண் தனது தன்மையை இழந்து விட்டது. மண் மீண்டும் வளம் பெற மாட்டுச்சாணம் மட்டுமே உதவும் என்றார்.