அவிநாசி:அவிநாசி காமராஜ் நகரில், பொங்கல் திருவிழா கொண்டாட்டம் களை கட்டியது.அவிநாசி காமராஜ் நகர் குடியிருப்போர் நலச்சங்கம், வெல்கம் பாய்ஸ் மற்றும் காமராஜர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில், பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது.ஊர் பொதுமக்கள் சார்பில், பொங்கல் வைக்கப்பட்டது. சிறுவர், சிறுமியர்க்கு ஓட்டப்பந்தயம், பலுான் உடைத்தல், லெமன் இன் ஸ்பூன், ஸ்லோ சைக்கிள் ரேஸ், வினாடி வினா, தேங்காய் அடித்தல், பந்து சேகரித்தல், லக்கி கார்னர், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகள் நடத்தப்பட்டன. மாலை, கும்மியாட்டம் நடந்தது. குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. அவிநாசி போலீஸ் ஸ்டேஷனில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. போலீசார், போக்குவரத்து போலீசார், மகளிர் போலீஸ் ஸ்டேஷன் போலீசார் என, அனைவரும் பாரம்பரிய உடையணிந்து, பொங்கல் வைத்து, கொண்டாடினர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின், பொன்ராமபுரம் கிளை சார்பில், 9வது ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா நடந்தது. ஒன்றிய தலைவர் அருண், துவக்கி வைத்தார். முன்னாள் ஊராட்சி தலைவர் பாலசுப்ரமணியம், போட்டிகளை துவக்கி வைத்தார். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. பின், பரிசளிப்பு விழா பொதுக் கூட்டம் நடந்தது. செயலாளர் தங்கராஜ் தலைமை வகித்தார். வாலிபர் சங்க மாவட்ட செயலர் மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர். அவிநாசிலிங்கம்பாளையத்தில், 28வது ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. சதீஷ்குமார், கொடியேற்றினார். பெரியசாமி, கணபதிசாமி ஆகியோர் மரக்கன்று நட்டு, விழாவை துவக்கி வைத்தனர். முதல் போட்டியை, சுப்ரமணி துவக்கி வைத்தார். மாலை நடந்த பரிசளிப்பு விழா பொதுக் கூட்டத்துக்கு, வாலிபர் சங்க மாநில இணை செயலாளர் பாலசந்திரபோஷ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பங்கேற்றனர். திருப்பூர் நகரப்பகுதியில், கம்யூ., கட்சிகளின் இளைஞர் அமைப்புகள், மாணவர் அமைப்புகள் சார்பில், பொதுமக்களுடன், சமத்துவ பொங்கல் விளையாட்டு விழா நடந்தது. கருவம்பாளையம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், விளையாட்டு கழகம், மாதர் சங்கங்கள் சார்பில், 14ம் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. பெண்கள், ஆண்கள், முதியோர், குழந்தைகள், இளைஞர்கள் என, தனித்தனி போட்டிகள் நடத்தப்பட்டன.கோலப்போட்டி, பலுான் உடைத்தல், சாக்கு ஓட்டம், பன் சாப்பிடுதல், ஸ்டிக்கர் பொட்டு ஒட்டுதல், ஸ்கிப்பிங் ரேஸ், லக்கி கார்னர், ஸ்லோ சைக்கிள், கயிறு இழுத்தல், பானை உடைத்தல், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. மாலையில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மங்கலம், சுல்தான்பேட்டையில், இளைஞர் நற்பணி மன்றம் சார்பில், 19ம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா நடந்தது. மாகாளியம்மன் கோவில் திடலில் நடந்த நிகழ்ச்சியில் ஓட்டப்பந்தயம், பிஸ்கட் கடித்தல், சாக்கு ஓட்டம், இசை நாற்காலி, 'லெமன் ஸ்பூன்', ஊசியில் நுால் கோர்த்தல், கயிறு இழுத்தல் போட்டிகள் நடத்தப்பட்டது.ஒவ்வொரு போட்டியிலும், இளம் பெண்களுடன், வயதான பெண்களும் ஆர்வமாக போட்டியில் பங்கேற்றனர்.உறியடிக்கும் போட்டியில், பலர் பங்கேற்ற நிலையில், வயதான மூதாட்டி ஒருவர் பானை உடைத்து, 505 ரூபாய் பரிசு பெற்றார். அதேபோல், ஆண்களை காட்டிலும், கயிறு இழுக்கும் போட்டியில், பெண்கள் ஆர்வமாக பங்கேற்றனர்.