திருப்பரங்குன்றம் : மதுரை விளாச்சேரி மொட்டமலையிலுள்ள மதுக்கடையை அகற்றக்கோரி அப்பகுதி பெண்கள் கடை முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.
பஸ் மறியலுக்கும் முயன்றனர். நேற்று காலை கடையை திறக்க வந்த பணியாளர்கள் போராட்டத்தால் திரும்பிச் சென்றனர்.பெண்கள் கூறியதாவது: குடியிருப்புகள் நிறைந்த இடத்தில் மதுக்கடை உள்ளது. பகல் 12:00 மணிக்கு திறக்கப்படும் கடைக்காக காலை 9:00 மணிக்கே ஆண்கள், குறிப்பாக 22 வயதிற்குட்பட்டோர் வந்து அமர்ந்து கொள்கின்றனர். குடித்துவிட்டு அரைகுறை ஆடைகளுடன் ரோட்டில் நின்றுகொண்டு அசிங்கமாக பேசுகின்றனர்.
அவர்களை ஓரமாக நிற்க கூறினால் கத்தியை காட்டி மிரட்டுகின்றனர். குடித்துவிட்டு ஒருவருக்கொருவர் சண்டையிடுகின்றனர். ரோட்டில் நடக்கவே பயமாக உள்ளது. அங்கன்வாடிக்குள் குடித்துவிட்டு பாட்டில்களை உடைக்கின்றனர். இரவில் வீட்டின் கதவுகளையும் தட்டுகின்றனர்.
கடையின் எதிரே குடிநீர் குழாய், பலசரக்கு கடைகள் உள்ளன. அங்கு பெண்கள் செல்ல முடியவில்லை. ஜன.,15ல் கடைமுன்பு நடந்த கொலையுடன் சேர்த்து அப்பகுதியில் இதுவரை 3 கொலைகள் நடந்துள்ளன. மதுக்கடையை அகற்ற வேண்டும், என்றனர். பின்பு திருநகர் 3வது பஸ் ஸ்டாப்பில் ரோடு மறியலுக்கு சென்றனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பினர்.