கோவை:மொபட்டில் வைத்திருந்த, 2.50 லட்சம் ரூபாய் திருடப்பட்டது. இந்த சம்பவத்தில், கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கோவை, குனியமுத்துாரை சேர்ந்தவர் முருகன். இருசக்கர வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மகளுக்கு நகை எடுக்க, குனியமுத்துாரில் உள்ள ஒரு வங்கி கணக்கில் இருந்து, 2.50 லட்சம் ரூபாய் எடுத்தார். பின், மனைவியுடன் மொபட்டில் உக்கடம், நரசிம்மர் கோவிலுக்கு சென்றார்.அப்போது பணத்தை வைத்து விட்டு, கோவிலுக்குள் சென்றனர். திரும்பி வந்து பார்த்தபோது, பணம் திருடுபோனது தெரிந்து அதிர்ச்சியடைந்தனர். பெரியகடைவீதி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்தில் உள்ள, கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்தனர்.கோவில் முன் இருந்த கண்காணிப்பு கேமராவில், முருகனின் மொபட்டில் இருந்த பணத்தை, நான்கு பேர் திருடும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இருவர் மொபட்டின் சீட்டை துாக்குவதும், இருவர் பணத்தை வாங்கி மறைத்து நிற்பதும் பதிவாகியிருந்தது. இதன் அடிப்படையில், போலீசார் திருட்டு கும்பலை தேடி வருகின்றனர்.