மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் கோவை பஸ்கள் நிற்கும் இடத்திலும், ஊட்டி, கோத்தகிரி பஸ்கள் நிற்கும் இடத்திலும் நகராட்சிக்கு சொந்தமான இரண்டு கட்டண கழிப்பிடங்கள் உள்ளன. இக்கழிப்பிடத்தில் சிறுநீர் கழிக்க இரண்டு ரூபாய் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் ஏலம் எடுத்தவர்கள் ஒரு நபருக்கு ஐந்து ரூபாய் கட்டணம் வசூல் செய்கின்றனர்.
இந்த கழிப்பிடங்களுக்கு தேவையான தண்ணீர், நகராட்சி மேல்நிலைத் தொட்டியிலிருந்து குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.இரண்டு கழிப்பிடங்களிலும் நாள் ஒன்று ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதில் இருந்து வெளியேறும் கழிவுநீரை முறையாக அகற்றாமல், நேரடியாக சாக்கடையில் விடுகின்றனர்.வீடுகளில் உள்ள கழிவுநீர் தொட்டியிலிருந்து மனிதக்கழிவுகள் சாக்கடையில் கலந்தால், நகராட்சி நிர்வாகம் அந்த வீட்டின் உரிமையாளருக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கிறது.ஆனால் நகராட்சி கட்டண கழிப்பிடத்திலிருந்து கழிவுகள் நேரடியாக சாக்கடையில் செல்வதால் மக்கள் நகராட்சி நிர்வாகத்தின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் காந்திராஜுவிடம் கேட்டபோது, ''புகார் ஏதும் வரவில்லை. விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.