-சிட்லப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட, ஜட்ஜ் காலனியில் உள்ள மழைநீர் வடிகால், துார்வாரப்படாமல் புதர் மண்டி கிடப்பதால், பொதுமக்கள் சுகாதார சீர்கேட்டில் சிக்கி வருகின்றனர்.சிட்லப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட, 18வது வார்டு, ஜட்ஜ் காலனியில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு, நெஞ்சக நோய் மருத்துவமனை, ஜி.எஸ்.டி., சாலை, வேதாந்தம் காலனி ஆகிய பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர், சிட்லபாக்கம் ஏரிக்கு செல்லும் வகையில், 30 ஆண்டுகளுக்கு முன் வடிகால் அமைக்கப்பட்டது. 850 அடி நீளம், 20 அடி அகலம் கொண்ட இந்த வடிகால், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த வடிகாலில், மழைக்காலத்தில் மட்டும் அதிகளவில் தண்ணீர் சென்றது. சில ஆண்டுகளாக, வடிகால் ஒட்டிய குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், மழைநீர் வடிகாலில் விடப்பட்டது. தொடர்ந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், வடிகால் முழுவதும் ஓடி, ஏரியில் கலக்கிறது. இதனால், ஏரி நீர் மாசடைந்து வருகிறது.பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வடிகாலை, பேரூராட்சி நிர்வாகமும், பொதுப் பணித்துறையும் கண்டுகொள்ளாததால், தற்போது புதர் மண்டி காணப்படுகிறது. இதனால், மழைக்காலங்களின் போது, கழிவுநீர் செல்வது தடைபட்டு, சுற்றியுள்ள பகுதிகளில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.இது குறித்து, அப்பகுதியைச் சேர்ந்த ஜெயந்தி, 39, என்பவர் கூறியதாவது:அதிகாரிகளின் மெத்தனத்தால், பராமரிப்பின்றி கிடக்கும் வடிகாலில் கழிவுநீர் கலப்பு தொடர்கிறது. அதனால், வடிகாலில் அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகி, அப்பகுதி மக்கள், 'டெங்கு' மற்றும் பன்றிக்காய்ச்சலால் அவதியடைந்து வருகின்றனர். ஏரியில் கலக்கும் கழிவுநீரால், நிலத்தடி நீர் மாசடைந்து, ஜட்ஜ் காலனிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள, 100க்கும் மேற்பட்ட கிணறுகளில், புழு, பூச்சிகள் மற்றும் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகின்றன.பாதாள சாக்கடை திட்டம் வாயிலாக, இந்த வடிகாலை மூடி, 10 அடிக்கு ஒரு, 'மேன் ஹோல்' அமைக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள், 20 ஆண்டுகளாக, பேரூராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், இத்திட்டத்தை செயல்படுத்த போதிய நிதியாதாரம் இல்லை என, பேரூராட்சி அதிகாரிகள் அலட்சியமாக பதிலளிக்கின்றனர்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள், வடிகாலில் இணைக்கப்பட்டுள்ள கழிவுநீர் இணைப்புகளை துண்டிக்க வேண்டும். மேலும் வடிகாலை துார் வாரி, மழைநீர் போக்குவரத்திற்கு வழி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
- -நமது நிருபர்-