கோவை:கோவையில் கூட்டுறவு சங்கச் செயலாளரை கடத்தி, ஆபாச படம் எடுத்து மிரட்டி, 50 லட்சம் ரூபாய் பறித்த ரேஷன் கடை ஊழியர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.கோவை, ரத்தினபுரி, ஜி.வி.ஜி., வீதியைச் சேர்ந்தவர் சரவணகுமார், 51. வேலாண்டிபாளையம் கூட்டுறவு சங்கச் செயலாளர். கடந்த, 2016ம் ஆண்டில் பணி முடிந்து வீட்டுக்கு சென்ற இவரை, ஒரு கும்பல் மதுக்கரைக்கு கடத்தி, நிர்வாணப்படுத்தி ஒரு பெண்ணுடன் இருப்பது போல ஆபாச படம் எடுத்தது.இந்த படத்தை வெளியிடுவதாக மிரட்டி இரண்டு ஆண்டுகளில், 50 லட்சம் ரூபாயை பறித்துள்ளனர். கடந்த, 18ம் தேதி மீண்டும் சரவணகுமாரை தொடர்பு கொண்ட கும்பல், ஐந்து லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளது. இதையடுத்து சரவணகுமார், சாய்பாபாகாலனி போலீசில் புகார் அளித்தார்.போலீசார் விசாரணை நடத்தி வீரகேரளம், அண்ணாநகர் ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த பத்மநாபன், 42, கோவில்மேடு, சாஸ்திரி வீதியைச் சேர்ந்த நாகராஜ், 43, கவுண்டர்மில்ஸ், சேரன் நகரைச் சேர்ந்த விஷ்ணுகுமார், 32 ஆகியோரை நேற்று கைது செய்தனர்.சாய்பாபாகாலனி போலீசார் கூறுகையில், 'கைது செய்யப்பட்ட நாகராஜ், ரேஷன் கடை ஊழியர். பத்மநாபன் மற்றும் விஷ்ணுகுமார் ஆகியோர் இருசக்கர வாகன 'கன்சல்டிங்' தொழில் செய்து வருகின்றனர். போத்தனுாரைச் சேர்ந்த கார்த்திகேயன், கணபதியை சேர்ந்த ஐயப்பன் உள்பட மூன்று பேரை தேடி வருகிறோம். இக்கும்பலுடன் சேர்ந்து ஆபாச படம் எடுத்த பெண் யார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம்' என்றனர்.