| மத்திய பட்ஜெட்டில் வருமான வரி உச்ச வரம்பு அதிகரிப்பு: அனைத்து தரப்பினர் வரவேற்பு Dinamalar
மத்திய பட்ஜெட்டில் வருமான வரி உச்ச வரம்பு அதிகரிப்பு: அனைத்து தரப்பினர் வரவேற்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

02 பிப்
2019
10:00

கரூர்: மத்திய அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட, தனிநபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பு அதிகரித்துள்ளதை, பல்வேறு தரப்பினர் வரவேற்றுள்ளனர்.


வரும் மார்ச் மாத இறுதியில், லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக உள்ளநிலையில், மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை, லோக்சபாவில் மத்திய நிதியமைச்சர் பியூஸ் கோயல் தாக்கல் செய்தார். அதில், அறிவிக்கப்பட்ட சலுகைகளை பல்வேறு தரப்பினர் வரவேற்றுள்ளனர்.


கரூர் மாவட்ட வர்த்தகர் சங்க தலைவர் ராஜூ: தனிநபர் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பை உயர்த்த, பல ஆண்டுகளாக கோரி வந்தோம். அதை தற்போது, 2.50 லட்சம் ரூபாயில் இருந்து, ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளதை வரவேற்கிறோம். நாடு முழுவதும், விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும், கரூரில் இருந்து, புதிய ரயில் இயக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்தோம். ஆனால், அதுகுறித்து எந்த அறிவிப்பும் இல்லை.


அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல், அரிசி மொத்த வியாபாரிகள் சங்க மாநில இணை செயலாளர் கே.எஸ்.வெங்கட்ராமன்: நாட்டில் விவசாயம், வணிகம் முதன்மையாக உள்ளது. தனிநபர் வருமான வரி உச்சவரம்பை அதிகரித்துள்ளது வரவேற்கத்தக்கது. அதேபோல், விவசாயிகளுக்கு உதவித்தொகை அறிவித்துள்ளது நல்ல திட்டம். நாட்டில் முத்ரா திட்டத்தில் கடன் பெற்றுள்ளவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆனால், கரூர் மாவட்டத்தில், முத்ரா திட்டத்தில், வங்கிகள் அதிக அளவில் கடன் வழங்கவில்லை. குறிப்பாக பெண்களுக்கு இத்திட்டத்தில், வங்கிக் கடன் கிடைக்க வில்லை. சிறு வியாபாரிகளுக்கு, முத்ரா வங்கி கடன், அதிக அளவில் வழங்க வேண்டும்.


தமிழ்நாடு காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் நலச் சங்க தலைவர் மகாதானபுரம் வி.ராஜாராம்: இது இடைக்கால பட்ஜெட்டாக தெரியவில்லை. நீண்ட கால பட்ஜெட் போல, கவர்ச்சி அறிவிப்புகள் அதிகம் உள்ளன. விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் அறிவிக்கப்பட்டுள்ள உதவித்தொகை, எந்த வகையில் வழங்கப்படும் என தெரியவில்லை. வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்றால், இந்த அறிவிப்புகள் செயல்பாட்டில் இருக்கும். மாற்று அரசு ஆட்சிக்கு வந்தால், இந்த பட்ஜெட் அறிவிப்புகள் செயல்படுமா என தெரியவில்லை. இதனால், இந்த இடைக்கால பட்ஜெட் மீது அதிருப்தியும் இல்லை. எதிர்ப்பும் இல்லை. விவசாயிகளின் கனவான, நதிகள் இணைப்பு குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.


கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர் ஆர்.ஸ்டீபன் பாபு: லோக்சபா தேர்தலை மனதில் கொண்டு, இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர். வருமான வரி உச்சவரம்பை அதிகரித்துள்ளனர். இது முழுக்க முழுக்க, தேர்தலுக்கான அறிவிப்பு. விவசாயத் துறை வளர்ச்சிக்கு எதிர்பார்த்த அறிவிப்பு இல்லை. அதே போல், ஜவுளி துறை ஏற்றுமதிக்கும் சலுகைகள் இல்லை. குறு, சிறு தொழில்களுக்கு, 25 சதவீதம் மானியம் வழங்குவதாக அறிவித்துள்ளனர். அதில், ஜவுளித்துறைக்கு எத்தனை சதவீதம் ஒதுக்கப்படும் என்ற அறிவிப்பு இல்லை. வரும் லோக்சபா தேர்தலில், ஓட்டு வங்கியை அதிகரிக்கும் வகையில், கவர்ச்சி அறிவிப்புதான் அதிகம் உள்ளது.


கரூர் வெண்ணைமலையை சேர்ந்த இல்லத்தரசி ஆர்.காந்திமதி: மத்திய பட்ஜெட்டில், இதுவரை இல்லாத அளவில், பெண்களுக்கு அதிக அளவில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. பணிபுரியும் பெண்களுக்கு, மகப்பேறு விடுப்பு, 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், பணிபுரியும் பெண்கள் மகிழ்ச்சியடைவர். மேலும், பெண்கள் நலனுக்காக, எட்டு கோடி இலவச கேஸ் இணைப்புகள் வழங்க அறிவிப்பு உள்ளது. புதிய மெகா பென்ஷன் திட்டம், வேலைக்கு செல்லாமல் வீட்டில் உள்ள பெண்களுக்கு கைகொடுக்கும். முத்ரா திட்டத்தில் இதுவரை, 70 கோடி பெண்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளதாக உள்ள அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X