| தலைதூக்கும் குடிநீர் பற்றாக்குறை பிரச்னை: கலெக்டர் அலுவலகத்திற்கு மக்கள் படையெடுப்பு Dinamalar
தலைதூக்கும் குடிநீர் பற்றாக்குறை பிரச்னை: கலெக்டர் அலுவலகத்திற்கு மக்கள் படையெடுப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

05 பிப்
2019
10:13

கரூர்: குடிநீர் பிரச்னையை தீர்க்க, சரியான நடவடிக்கை இல்லாததால், கலெக்டர் அலுவலகம் நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர்.


கரூர் மாவட்டத்தின் நீராதாரமாக விளங்கும் காவிரி, அமராவதி ஆறுகள் மூலம், 20க்கும் மேற்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தற்போது, ஆறுகளில் நீரோட்டம் இருப்பதால் குடிநீர் போதுமான அளவில் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால், மோட்டர் பழுது போன்ற பல காரணங்களால், தண்ணீர் ஏற்ற முடியாத நிலையுள்ளது. இதனால், குடிநீர் பிரச்னையை தீர்க்கக்கோரி, அரசு அலுவலகங்கள் முற்றுகை, சாலை மறியல், மனு கொடுத்தல் என, தினமும் கலெக்டர் அலுவலகத்துக்கு மக்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். அப்போதைக்கு பிரச்னையை தீர்ப்பதாக கூறி, சமாதானம் செய்து அவர்களை அனுப்பி வைக்கின்றனர். ஆனால், அதன்படி, நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதால், குறைதீர் கூட்டத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் மக்கள் குவிவது வாடிக்கையாகிவிட்டது.


தென்னிலை மேற்கு பஞ்சாயத்து பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு, குறைதீர் கூட்டத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: தென்னிலை மேற்கு பகுதியில், 1,500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு, காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது, 15 நாட்களுக்கு ஒரு முறை கூட குடிநீர் வருவது அரிதாக உள்ளது. காலி குடங்களுடன் தண்ணீருக்கு அலைய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இப்பகுதியில், ஆழ்துளை கிணறு தோண்டி, குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.


வெள்ளியணை பகுதி மக்கள் கொடுத்த மனு: எங்கள் பஞ்சாயத்தில், உள்ள ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களில், 1,000 குடும்பத்தினர் வசிக்கிறோம். இப்பகுதியில், காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில், பல ஆண்டுகளுக்கு முன்பே குழாய் பதிக்கப்பட்டது. ஆனால், இன்னும் தண்ணீர் வினியோகம் தொடங்கவில்லை. இது குறித்து, 13 முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. குடிநீருக்கு சிரமப்படுகிறோம். இவ்வாறு அவற்றில் கூறப்பட்டுள்ளன.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X