மதுரை:அரசு போக்குவரத்துக் கழகங்கள் விபத்து இழப்பீட்டிற்கான இன்சூரன்ஸ் தொகையை வங்கி கணக்கில் செலுத்தி, பராமரிக்க தாக்கலான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திருச்செந்துார் ராம்குமார் ஆதித்யன் மனு
அரசு போக்குவரத்துக் கழக பஸ்களுக்கு இன்சூரன்ஸ் செலுத்த விலக்களித்து, 1971 ல் போக்குவரத்துத்துறை உத்தரவிட்டது. ஆனால் அதில், ஒவ்வொரு போக்குவரத்து கழகமும் விபத்து இழப்பீட்டிற்கான இன்சூரன்சுக்குரிய தனி தொகையை மாதந்தோறும் ஒதுக்கி பராமரிக்க கூறப்பட்டுள்ளது. அதை நிர்வாகங்கள் பின்பற்றுவதில்லை.
விபத்து வழக்குகளில் நீதிமன்றங்கள் இழப்பீடு வழங்க உத்தரவிட்டாலும், போக்குவரத்துக் கழகங்கள் வழங்குவதில்லை. பஸ்களை ஜப்தி செய்ய நீதிமன்றங்கள் உத்தரவிடுகின்றன.
இன்சூரன்ஸ் டெபாசிட்டிற்கான தொகையை மறு மதிப்பீடு செய்ய வேண்டும். மாதந்தோறும் தொகையை வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். அதை முறையாக பராமரித்து இழப்பீடு வழங்க போக்குவரத்துக் கழகங்களுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு தமிழக போக்குவரத்து கமிஷனர் மற்றும் அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப
உத்தரவிட்டது.