| இடைத்தேர்தல் வேட்பாளர்: தஞ்சையில் குமுறல் Dinamalar
இடைத்தேர்தல் வேட்பாளர்: தஞ்சையில் குமுறல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மார்
2019
07:58

தஞ்சாவூர்: தஞ்சை சட்டசபை தொகுதி, தி.மு.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளதால், தி.மு.க.,வினர் புலம்பி வருகின்றனர்.



தஞ்சை சட்டசபை தொகுதி, இடைத்தேர்தல் வேட்பாளராக, தி.மு.க., சார்பில், நகரச் செயலர் நீலமேகத்தை ஸ்டாலின் அறிவித்துள்ளார். தி.மு.க., இளைஞரணியில், பல பொறுப்புகளை வகித்திருந்தாலும், இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பதால், இவரை அறிவித்ததை, தி.மு.க.,வினரே விரும்பவில்லை.


தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோரை, நீலமேகம், தன்னுடன் வைத்திருக்கிறார். கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுவது தான், இவரது முக்கிய வேலை. பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள நகைக் கடை ஒன்றில், 'பஞ்சாயத்து' செய்தபோது, கடை உரிமையாளரை அடித்ததாகவும் போலீசில் புகார் உள்ளது. மேலும், வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன், நீலமேகத்தின் ஆதரவாளர்கள், வணிக நிறுவனங்களில், தேர்தல் நிதி வசூலிக்கத் துவங்கி உள்ளனர். துணிக்கடை ஒன்றில், 300 வேட்டிகள் நன்கொடையாக கேட்டுள்ளனர். இதேபோல், 100க்கும் மேற்பட்ட புகார்கள், கட்சித் தலைமைக்கு சென்றுள்ளன. இவ்வாறு, அவர்கள் கூறினர். 'சீட் கிடைக்காமல் ஏமாந்து போனவர்கள், இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கிளப்பி வருகின்றனர்' என, வேட்பாளர் நீலமேகம் தரப்பில் கூறப்படுகிறது.


அ.தி.மு.க.,வில் அதிருப்தி: தஞ்சாவூர் சட்டசபை தேர்தலுக்கு, அ.தி.மு.க.,வில், 'சீட்' கேட்டவர்களிடம், எம்.பி., வைத்திலிங்கம், பணம் கட்டச் சொல்லியுள்ளார். இதை நம்பி, கரந்தை பகுதி செயலர் அறிவுடைநம்பி, கோட்டை செயலர் புண்ணியமூர்த்தி, மருத்துவக் கல்லூரி பகுதிச் செயலர் சரவணன் ஆகியோர், பணம் கட்டியுள்ளனர். ஆனால், வைத்திலிங்கம் ஆதரவாளரான காந்திக்கு, 'சீட்' வாங்கி கொடுத்து விட்டதாக, சர்ச்சை எழுந்துள்ளது. வேட்பாளர் காந்தி, தேர்தல் பணிக்காக, பகுதி செயலர்களை போனில் தொடர்பு கொண்ட போது, மூன்று பேரின் போன்களும், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தன. ஆதரவாளர்களை, வீட்டிற்கு அனுப்பிய போது, மூவரும் வீட்டில் இல்லை, என தெரிவித்து விட்டனர். இதனால், வேட்பாளர் காந்தி, விரக்தியில் உள்ளார்.


 

Advertisement
மேலும் தஞ்சாவூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X