| லோக்சபா தேர்தலில் 9வது முறையாக போட்டியிடும் தஞ்சை பழனி மாணிக்கம் Dinamalar
லோக்சபா தேர்தலில் 9வது முறையாக போட்டியிடும் தஞ்சை பழனி மாணிக்கம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

29 மார்
2019
06:53

தஞ்சாவூர் லோக்சபா தொகுதிக்கு, தி.மு.க., சார்பில், முன்னாள் மத்திய அமைச்சர் பழனி மாணிக்கம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் தற்போது, 9வது முறையாக, இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். தமிழகத்தில் யாரும், ஒரே தொகுதியில், ஒன்பது முறை போட்டியிட்டதில்லை; அதனால், அதிக முறை லோக்சபா தேர்தலில் போட்டியிட்டவர் என்ற, பெருமையை பெறுகிறார்.



பழனி மாணிக்கம், 1984ல், முதல்முறையாக, தஞ்சாவூர் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டார். இருந்தாலும், தோல்வி அடைந்தார். பின், 1989, 1991 தேர்தல்களிலும் போட்டியிட்டு, தோல்வியையே தழுவினார். கடந்த, 1996ல் போட்டியிட்ட போது, வெற்றி பெற்று, எம்.பி.,யானார்; 1998, 1999, 2004, 2009ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில், போட்டியிட்டு, தொடர் வெற்றிகள் பெற்றார். தொடர்ந்து ஐந்து முறை, வெற்றி பெற்ற இவருக்கு, 2014 தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை. இவருக்கு பதிலாக டி.ஆர்.பாலு போட்டியிட்டு, தோல்வி அடைந்தார். இந்நிலையில், ஒன்பதாவது முறையாக, தஞ்சாவூர் தொகுதியில், பழனி மாணிக்கம் களம் இறங்கியுள்ளார். இதுவரை, தமிழகத்தில், எந்த பிரபல கட்சியிலிருந்தும், யாரும் ஒன்பது முறை, லோக்சபா தேர்தலில் போட்டியிட்டதில்லை. இப்படியொரு சாதனைக்கு சொந்தக்காரரான பழனி மாணிக்கம், இந்த தேர்தலில் வெற்றி பெற்றால், அதிகமுறை வெற்றி பெற்ற வேட்பாளர் என்ற, பெருமையையும் பெறுவார். நம் நாட்டில், மேற்கு வங்க மாநிலத்தில், கம்யூ., கட்சியைச் சேர்ந்த, இந்திரஜித் குப்தா, அதிகபட்சமாக, 13 முறை லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு, 11 முறை வெற்றி பெற்று, எம்.பி.,யாகியுள்ளார்.


- நமது நிருபர் -


 

Advertisement
மேலும் தஞ்சாவூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X