| ஏரிகளில் மண் குவாரி அமைத்து அதிகாரிகள்...கொள்ளை!:விவசாயம், குடிநீருக்கு உதவாத வகையில் நாசம்;நீர்நிலை பாதுகாப்புக்கு உருவாகுமா தனி அமைப்பு? Dinamalar
ஏரிகளில் மண் குவாரி அமைத்து அதிகாரிகள்...கொள்ளை!:விவசாயம், குடிநீருக்கு உதவாத வகையில் நாசம்;நீர்நிலை பாதுகாப்புக்கு உருவாகுமா தனி அமைப்பு?
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
01:18

சென்னை புறநகரில், பொதுப்பணித் துறை பொறியாளர் பெயரில் டெண்டர் வழங்கப்பட்டு, ஏரிகளில் மண் குவாரிகள் நடத்தப்பட்டதில், ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளதாக, புகார் எழுந்துள்ளது. நீர்வரத்து பகுதிகளில் மண் எடுத்திருப்பதால், விவசாயத்திற்கோ, குடிநீர் ஆதாரமாகவோ, ஏரிகளை பயன்படுத்த முடியாத நிலை உருவாகி உள்ளது.


தமிழகத்தில், 2016ம் ஆண்டு, வட கிழக்கு பருவமழை பொய்த்ததை அடுத்து, பாசனத்திற்கும், குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு, நீர்நிலைகள் வறண்டன.அவற்றின் கொள்ளளவை உயர்த்த, நீர்நிலைகளில், வண்டல் மண் எடுக்க, விவசாயிகளுக்கு, அரசு அனுமதி வழங்கியது.இதற்கான அரசாணை, 2017 ஏப்., 24ல் வெளியிடப்பட்டது.


அதன்படி, தமிழகம் முழுவதும், பொதுப்பணித் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள, 42,115 ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில், 36,345 நீர்நிலைகளில் இருந்து, மாவட்ட கலெக்டர்கள் அனுமதியுடன், ஆக்கிரமிப்புகளை அகற்றி, மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது.


கிராக்கி


அவ்வாறு எடுக்கப்படும் மண்ணை, அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்களுக்கு வழங்கவும், பொதுப்பணித் துறையினர், சம்பந்தப்பட்ட நீர்நிலைகளின் கரைகளை பலப்படுத்தவும் உத்தரவிடப்பட்டது.


இதை தனியாரிடம் வழங்கினால், மண் திருட்டுக்கு வழிவகுக்கும் என்பதை கருத்தில் வைத்து, பொதுப்பணித்துறை பொறியாளர் பெயரிலேயே டெண்டர் வழங்கி, அவர்கள் வாயிலாக, மண் எடுக்க முடிவு செய்யப்பட்டது.நல்ல நோக்கத்திற்காக, அரசால் பிறப்பித்த இந்த அரசாணையை, ஏரி மண்ணுக்கு கிராக்கி இருக்கும் பகுதிகளில், லாப நோக்கத்திற்காக, மண்ணை விற்று பணம் சம்பாதிக்க, அதிகாரிகள் பயன்படுத்திக் கொண்டது, தற்போது அம்பலமாகி உள்ளது.


இது குறித்து, சென்னை புறநகரைச் சேர்ந்த, சமூக ஆர்வலர், கே.தீனதயாளன், 40 கூறியதாவது: பொதுப்பணித் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின், கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளில், மாவட்ட கலெக்டர் அனுமதியில்லாமல், ஒருபிடி மண்ணை கூட எடுக்கக் கூடாது.அதனால் தான், மண் அள்ளும் டெண்டர், கலெக்டர் அனுமதியுடன், அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு, அவர்கள் வாயிலாக, மேல் மட்டத்தில் உள்ள, முக்கியப் புள்ளிகளுக்கு மாற்றப்படுகிறது.


ஏரி, குளம் ஆகியவற்றை ஆழப்படுத்துவதற்கான காலத்தை பொறுத்து, டெண்டர் காலம், 45 - 55 நாட்கள் வரை நிர்ணயிக்கப்படுகிறது.


மண் திருட்டுஅதன்படி, நாளொன்றுக்கு, 100 லோடுகள் வீதம், நிர்ணயிக்கப்படும் கால அளவிற்கேற்ப, 5,000 - 5,500 லோடுகள் வரை மட்டுமே, மண் எடுக்க வேண்டும்.ஆனால், அதிகாரிகள் தங்களின் லாபத்திற்காக, 50 ஆயிரம் லோடுகள் வரை, மண் அள்ள, மறைமுகமாக அனுமதி அளிக்கின்றனர்.


இந்த வகையில், ஒரு ஏரியின், குறிப்பிட்ட நாட்களுக்கு வழங்கப்படும் டெண்டர் முடிவதற்குள், பல லட்சம் ரூபாய் வரை, அந்த ஏரி சம்பந்தப்பட்ட பொதுப்பணித் துறை அதிகாரிகள் அனைவரும், கொள்ளை லாபம் பார்க்கின்றனர்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுக்குமாடி குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள் என, கட்டுமான பணிகள் அதிகமாக நடந்து வருகின்றன.தொழிற்பேட்டைகளின் மேம்பாடும் நடக்கிறது. இதனால், தாழ்வான பகுதிகளை உயர்த்த, மண் தேவை அதிகமாக உள்ளது.


எந்த பகுதியில் மண் தேவை அதிகம் உள்ளதோ, அந்த பகுதியில் உள்ள நீர்நிலைகளை தேர்வு செய்து, 'துார்வாரி ஆழப்படுத்துகிறோம்' என்ற பெயரில், கலெக்டரிடம் அனுமதி பெற்று, அதிகாரிகள் மண் திருடி விற்கின்றனர்.நீர்வரத்து பகுதிகளில் மண் எடுக்கப்படுவதால், மழைக்காலங்களில், ஏரிக்கு நீர் வராது. இதனால், விவசாயம் அழிவதுடன், குடிநீர் பயன்பாட்டிற்கும், நீரை பயன்படுத்த முடியாத நிலை உருவாகி உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.


கோரிக்கைகால்நடைகள், விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரத்திற்காக, நம் முன்னோரால் உருவாக்கப் பட்டவை தான், ஏரி, குளங்கள். இவை தற்போது, அரசியல்வாதிகள் மட்டுமின்றி, அதிகாரிகளும் சம்பாதிக்கும் தளமாக பயன்படுத்துகின்றனர்.சிலை கடத்தல் தடுப்பு பிரிவை போல, நீர்நிலை களில் மண் திருட்டு நடப்பதை தடுக்கவும், அவற்றை கண்காணிக்கவும், பாதுகாக்கவும் தனி அமைப்பை உருவாக்க, விவசாயிகள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.


அதே நேரம், இதுவரை நடந்த மண் கொள்ளை குறித்து, விரிவான விசாரணை நடத்தவும், ஐகோர்ட், பசுமை தீர்ப்பாயம் ஆகியவை முன்வர வேண்டும் என, அரசு மீது நம்பிக்கை இழந்த, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


புறநகரில் சூறையாடப்பட்ட ஏரிகள்!சென்னை புறநகரில் பணியாற்ற, பொதுப்பணித் துறையில் கடும் போட்டி காணப்படும். இதற்கு, இங்கு நீர்நிலைகள் அதிகம் இருப்பதும், கனிமவள கொள்ளையால், பல கோடிகளை சம்பாதிக்கலாம் என்பதும் தான் காரணம்.

கடந்த ஓராண்டில், மணிமங்கலம், மாடம்பாக்கம், அகரம்தென் ஏரிகள் உட்பட, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில், அரசு நிர்ணயித்துள்ள, 55 நாட்கள் என்ற உத்தரவையும் தாண்டி, 68 நாட்கள் வரை மண் எடுக்கப்பட்டுள்ளது. அங்கு, 5,000 லோடுக்கு பதில், 25 ஆயிரம் முதல் ௧ லட்சம் லோடுகள் வரை, மண் கொள்ளை நடந்து உள்ளது.


எடுக்கப்பட்ட மண்ணில், 10 சதவீதம் கூட, சம்பந்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும், உள்ளூர் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. மாறாக, மொத்த மண்ணும் மேல் மட்ட அளவில், முக்கிய புள்ளிகள் ஆதரவுடன், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில், ஒரு லோடு, 7,000 - 9,000 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. தற்போது, அகரம் தென் ஏரி உட்பட, மாவட்டத்தின் பல ஏரிகளிலும், மண் எடுக்கும் பணி தொடர்ந்து நடக்கிறது. அடையாறு ஆற்றிலும், துார்வாருதல் என்ற பெயரில், ஆயிரக்கணக்கான லோடு மணல் கொள்ளை நடந்தது குறிப்பிடத்தக்கது.


அம்மாடி... இவ்ளோ கமிஷனா?ஒரு நீர்நிலையில் மண் குவாரி அமைக்க, பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் பெயரில், மாவட்ட கலெக்டர் குத்தகை வழங்குவார்.ஆனால், அங்கு பொதுப்பணித்துறை குவாரி நடத்தாது. அரசியல் புள்ளிகள் யாருக்காவது, சப் - டெண்டர் போல் கொடுத்துவிடுவர். அவர்கள், 55 நாட்களில்,1 லட்சம் லோடு வரை மண் எடுப்பர். ஒரு லோடு மண்ணுக்கு, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர், அவருக்கு அடுத்த நிலையில் உள்ள எஸ்.டி.ஓ., எனப்படும், துணை வட்டார அதிகாரி, செயற்பொறியாளர், மேற்பார்வை பொறியாளர் ஆகியோருக்கு, தலா, 50 ரூபாய் கமிஷன் வழங்க வேண்டும்.


தலைமை பொறியாளர், அவருக்கு மேலானவர்களுக்கு, மொத்த தொகையாக, குவாரி குத்தகை எடுத்தவுடன் வழங்கிவிட வேண்டுமாம். இந்த வகையில், ஒரு ஏரியில், மண் குவாரி நடந்தால், உதவி பொறியாளருக்கு மட்டும், 25 லட்சம் ரூபாய் முதல், 40 லட்சம் ரூபாய் வரை கமிஷனாக கிடைக்கும் என கூறப்படுகிறது.

- நமது நிருபர்- -

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X