செம்பியம்:மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, இரும்பு ராடால், அவரை தலையில் அடித்துக் கொலை செய்த, போக்குவரத்து காவலரை, போலீசார் கைது செய்தனர்.
செம்பியம் காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர், பிரேம் நாதன், 37; கொத்தவால்சாவடி போக்குவரத்து பிரிவில், தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவனது மனைவி, அர்ச்சனா, 33. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். பிரேம்நாதன், தன் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அடிக்கடி தகராறு செய்து வந்தார். நேற்று மாலை, கணவன் -- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த பிரேம்நாதன், அருகில் கிடந்த இரும்பு ராடை எடுத்து, அர்ச்சனாவின் தலையில் அடித்துள்ளார்.இதில், அர்ச்சனா தரையில் விழுந்து உயிருக்கு போராடினார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். செம்பியம் போலீசார், கொலை வழக்கு பதிவு செய்து, பிரேம் நாதனை கைது செய்தனர்.