| பாலம் கட்ட தயக்கம்; பரிதவிக்கும் மக்கள் Dinamalar
பாலம் கட்ட தயக்கம்; பரிதவிக்கும் மக்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
05:15

வால்பாறை:வால்பாறையில் மழைக்கு இடிந்த பாலத்தை புதுப்பிக்க டெண்டர் விட்டும் பணிகள் துவங்காததால், மக்கள் விரக்தியடைந்துள்ளனர்.வால்பாறை நகர் வாழைத்தோட்டம் பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பழைய பாலம் வழியாக தான் கடந்த, 50 ஆண்டுகளுக்கு முன் வரை வாகனங்கள் சென்றன.ரோடு விரிவாக்கதிற்கு பின், மாற்று வழியில் வாகனங்கள் இயக்கப்படுகின்றன.


இதனால், பழைய பாலம் பயன்பாடற்ற நிலையில் இருந்தது. இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் பெய்த மழைக்கு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பாலம் இடிந்தது. இந்த வழித்தடத்தை பயன்படுத்த முடியாமல் வாழைத்தோட்டம் பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இடிந்த பாலத்தை சீரமைத்துதரக்கோரி இப்பகுதி மக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.இதனையடுத்து, நகராட்சி சார்பில், 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலம் சீரமைக்க டெண்டர் விடப்பட்டது. கடந்த ஆண்டு டிச., மாதம் புதிய பாலம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. ஆனால், நான்கு மாதங்களுக்கு மேலாகியும் இன்று வரை பாலம் கட்டும் பணி துவங்கவில்லை.மக்கள் கூறியதாவது:மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருவதில் ஆளுங்கட்சியினர் தொடர்ந்து சுணக்கம் காட்டி வருகின்றனர்.


தேவையற்ற இடங்களில் ரோடு விரிவாக்கம் என்ற பெயரில் பல லட்சம் மதிப்பீட்டில் தடுப்புச்சுவர் கட்டிவருகின்றனர்.ஆனால், மக்கள் வசிக்கும் பகுதிகளில் தேவையான அடிப்படை வசதிகள் செய்துதர நகராட்சி நிர்வாகமும் முன்வருவதில்லை.இடிந்த பாலம் சீரமைப்படும் என, எம்.பி., எம்.எல்.ஏ., ஆகியோர் உறுதி அளித்தனர். ஆனால் இன்று வரை பாலத்தை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.பாலத்தை சீரமைத்தால் மட்டுமே ஆட்டோ உள்ளிட்ட சிறிய வாகனங்களாவது வந்து செல்லும். தேர்தலுக்கு பிறகாவது பாலம் கட்டும் பணி உடனடியாக துவங்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X