| மரங்களில் இருந்த விளம்பரம் அகற்றம் Dinamalar
மரங்களில் இருந்த விளம்பரம் அகற்றம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
05:30

ஆனைமலை:பொள்ளாச்சி சுற்றுப்பகுதி இளைஞர்கள், சமூக வலைதளங்களில், 'டார்கெட் ஜீரோ' என்ற குழு துவங்கி, 'ஜீரோ பிளாஸ்டிக் பாரஸ்ட் ஜோன்' என்பதை வலியுறுத்தி, வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையில் வனப்பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றுகின்றனர்.நேற்று, 44வது வாரமாக, ஆழியாறு சோதனைச்சாவடி பகுதிகளில் ரோட்டில், பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.


அதன்பின், ஆழியாறில் இருந்து நா.மூ.சுங்கம் வரையில், ரோட்டோரங்களில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான மரங்களில் சட்ட விரோதமாக, ஆணி அடித்து பொருத்தப்பட்ட விளம்பர பலகைகளை அகற்றினர். குழுவினர் கூறியதாவது:மரங்கள் மழை பெய்யச்செய்து உயிர்களை மரணிக்கவிடாமல் காக்கிறது. உலகுக்கு உயிர்நாடியான மரங்களை, நாம் வெட்டி அழிக்கிறோம். ரோட்டோரங்களில் எஞ்சியிருக்கும் மரங்களிலும், தனியார் வணிக, கல்வி நிறுவனங்கள், அதிக அளவில் ஆணி அடித்து விளம்பர பலகைகள் வைக்கின்றனர்.ஆணி அடிப்பதால் மரங்களுக்கு நோய் ஏற்பட்டு மரணிக்கிறது.


கல்வி, வணிக நிறுவனங்களுக்கு தொடர்பு கொண்டு, ஆணி அடித்து விளம்பர பலகைகள் வைக்க வேண்டாமென்றால், அவர்கள் எதையும் கண்டுகொள்வது இல்லை.மரங்களை காப்பதற்காக நாங்களே, விளம்பர பலகைகளை அகற்றினோம். ஆழியாறு - நா.மூ.சுங்கம் வரையில், 80 விளம்பர பலகைகளை அகற்றினோம். மரங்கள் விளம்பரங்களை தாங்கும் சுமை தாங்கி அல்ல. மரங்களுக்கும் உயிருண்டு என்பதை அனைவரும் உணர வேண்டும். நெடுஞ்சாலைத்துறையினர் விளம்பரம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, குழுவினர் தெரிவித்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X