| திருப்பூரில் விஷவாயு தாக்கி நால்வர் பலி: கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது பரிதாபம் Dinamalar
திருப்பூரில் விஷவாயு தாக்கி நால்வர் பலி: கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது பரிதாபம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
06:35

திருப்பூர்:திருப்பூரில், சலவை நிறுவன கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது, விஷவாயு தாக்கி, வடமாநிலத்தை சேர்ந்த நால்வர் பலியான சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கோவை, கருமத்தம்பட்டியை சேர்ந்த ஜெயக்குமார், 40, திருப்பூர் கருப்பகவுண்டம்பாளையத்தில், 'யுனிட்டி காம்பேக்டிங்' என்ற பனியன் சலவை நிறுவனத்தை நடத்தி வருகிறார். நேற்று மதியம், நிறுவனத்தின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய, வடமாநிலத்தை சேர்ந்த ஏழு பேர் சென்றனர்.


சுமார், 15 அடி ஆழ தொட்டிக்குள், நால்வர் இறங்கி சுத்தம் செய்தனர். சிறிது நேரத்தில், மூவர் மயக்கமடைந்த நிலையில், பணியில் இருந்த ஒருவர் இதை கண்டு, தொட்டியில் இருந்து துாக்கி, வெளியே வந்தார்.வெளியில் இருந்த மூவரும், மற்றவர்களை மீட்டனர். மயக்கமான மூவர், சம்பவ இடத்திலேயே பலியாயினர். மூவரையும் வெளியே கொண்டு வர உதவி செய்த நபரும், சிறிது நேரத்தில் மயக்கமாக, அருகில் இருந்தவர்கள், திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி, அவரும் பலியானார்.தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு சென்ற, தெற்கு போலீஸ் உதவி கமிஷனர் நவீன்குமார் மற்றும் வீரபாண்டி போலீசார் விசாரித்தனர்.


பலியானது, அசாம் மாநிலத்தை சேர்ந்த, வீரபாண்டி, வாயக்கால் மேடு பகுதியில் தங்கி பணிபுரிந்து வந்த, அன்வர் உசேன், 19, தில்வர் உசேன், 19, மற்றொரு அன்வர் உசேன், 21 மற்றும் அபிதுர் ரகுமான், 19 என்பதும், இவர்கள் விஷவாயு தாக்கி பலியானதும் தெரியவந்தது. உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல், தொட்டியை சுத்தம் செய்ய வைத்த காரணத்தால், உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:நிறுவனத்தில், மூன்று தொட்டிகள் உள்ளன. முதலில் ஒரு தொட்டியில் இருந்த கழிவுகளை அகற்றி சுத்தம் செய்து விட்டனர். இரண்டாவது தொட்டியை சுத்தம் செய்த போது மயக்கமடைந்துள்ளனர். மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், நிறுவனத்தை பார்வையிட்டு சென்றனர்.


இதுகுறித்து விசாரித்து வருகிறோம். தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் சொல்வதற்குள், உயிரை காப்பாற்ற வேண்டுமென்ற அவசரத்தில், சக தொழிலாளர்களை மீட்பதில் முனைப்பு காட்டினர்.இவ்வாறு, போலீசார் கூறினர்.


உரிமையாளரே பொறுப்பு! மாசு கட்டுப்பாட்டு வாரிய (வடக்கு) பொறியாளர் செந்தில் விநாயகம் கூறுகையில், ''இதுபோன்ற கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்த, ஆட்களை இறக்கி வேலை செய்யக் கூடாது. இயந்திரம்வாயிலாக தான் சுத்தப்படுத்த வேண்டும். இதுகுறித்து, அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. நாங்களும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். தற்போது நடந்த சம்பவத்துக்கு, உரிமையாளரே பொறுப்பு. நிறுவனத்தை மூட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X