சிவகாசி:''எதிர்க்கட்சிகள்
அமைத்திருப்பது ஊழல் கூட்டணி. 2 ஜி, காமன்வெல்த், நிலக்கரி
உள்ளிட்ட ஊழல்களைச் செய்த கூட்டணி அது.'' என தே.மு.தி.க., பொருளாளர்
பிரேமலதா பேசினார்.
சாத்துார் சட்டசபை இடைத்தேர்தலில்
போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் ராஜவர்மனுக்கும்,
விருதுநகர் லோக்சபா தேர்தலில் தே.மு.தி.க., வேட்பாளர்
அழகர்சாமிக்கும் ஓட்டு சேகரித்து திருத்தங்கல்லில் தே.மு.தி.க.,
பொருளாளர் பிரேமலதா பேசியதாவது: இந்த கூட்டணி சாதாரண கூட்டணி
அல்ல. சரித்திரம் படைக்கும் கூட்டணி.
செல்லும் இடங்கள்
எல்லாம் மக்கள் மிகப் பெரிய ஆதரவை தருவதைப் பார்க்கும்போது, அனைத்து
தொகுதிகளிலும் வென்று, நாளை நமதே, நாற்பதும் நமதே என்று
சொல்லக்கூடிய அளவில் சாதனை புரியும். கூட்டணி தர்மத்தில்
தே.மு.தி.க., எப்போதும் நிலைத்து நிற்கும். இக்கூட்டணியை மக்கள்
வரவேற்கின்றனர். ஆனால், எதிர்க்கட்சிகள் அமைத்திருக்கும்
கூட்டணி ஊழல் கூட்டணி.
மேலும், 2 ஜி, காமன்வெல்த், நிலக்கரி உள்ளிட்ட
ஊழல்களைச் செய்த கூட்டணி அது. ஈழத் தமிழர்கள் படுகொலைக்குக்
காரணமானவர்கள் அக்கூட்டணியில் உள்ளனர். விவசாயம் நன்றாக
இருந்தால்தான் தமிழ்நாடு வளமாக இருக்கும். அதற்குத் தேசிய நதிகளை
இணைக்க வேண்டும். அத்திட்டத்தை மோடியால்தான் நிறைவேற்ற முடியும்.
பா.ஜ., வின் தேர்தல் அறிக்கையில் விவசாயம் தொடர்பாக அதிக அளவில்
வாக்குறுதிகளைத் தர உள்ளதாக கூறுகின்றனர். ராகுல்காந்தியும்
நிறைய வாக்குறுதிகளைக் கொடுத்துள்ளார். ஆனால், அவர் வெற்றி
பெறுவாரா என்பதே சந்தேகமாக இருக்கிறது.
வடநாட்டில் வெற்றி
வாய்ப்பு இல்லாததால்தான் கேரளாவில் போட்டியிடுகிறார். நமது
கூட்டணி மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி,
மக்கள் கூட்டணியாக இருக்கும். அதற்கு தமிழகம், புதுச்சேரியில்
உள்ள 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். இந்தக் கூட்டணியை
முறியடிக்க தி.மு.க., பல்வேறு சூழ்ச்சிகளைச் செய்தது. அதையும்
தாண்டி இக்கூட்டணி அமைந்துள்ளது.
இக்கூட்டணி
எதிர்காலத்திலும் தொடரும் தி.மு.க. ஆட்சியில் நாள் ஒன்றுக்கு 12
மணி நேரம் மின் வெட்டு இருந்தது. அடுத்து வந்த ஜெ., தலைமையிலான
அ.தி.மு.க. அரசு தான் தமிழகத்தினை மின் மிகை மாநிலமாக மாற்றியது.
இலங்கை படுகொலைக்கு முழு முதல் காரணமாக இருந்த தி.மு.க. வை அனைத்து
தொகுதிகளிலும் பொது மக்கள் புறக்கணித்து அ.தி.மு.க., கூட்டணிக்கு
வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். என்றார். அமைச்சர்
ராஜேந்திர பாலாஜி உடனிருந்தார்.