| பாரத் பெட்ரோலிய நிறுவன குழாய் பதிக்கும் பணி: தேர்தல் நேரத்தில் நிலத்தில் அளவீடு பணி துவக்கம் Dinamalar
பாரத் பெட்ரோலிய நிறுவன குழாய் பதிக்கும் பணி: தேர்தல் நேரத்தில் நிலத்தில் அளவீடு பணி துவக்கம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
08:26

ஈரோடு: பாரத் பெட்ரோலிய நிறுவனம் குழாய் பதிக்கும் பணியை, தேர்தல் நேரம் என்பதை கருத்தில் கொண்டு, விளை நிலங்களில் அளவீடு செய்யும் பணியை துவங்கி உள்ளனர். இதற்கு, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


இது குறித்து, பாரத் பெட்ரோலிய குழாய் பதிப்பு திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பொன்னையன் கூறியதாவது: பாரத் பெட்ரோலிய நிறுவனம், குழாய் பதிக்கும் திட்டத்தை கோவை மாவட்டம் இருகூரில் துவங்கி, பெங்களுரு தேவனகொந்தி என்ற இடத்தில் நிறைவு செய்கின்றனர். இத்திட்டப்பணி கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி வழியாக பெங்களுரு செல்லும். கொச்சியில் இருந்து கரூர் வரை, பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் குழாய் கொண்டு செல்லும் திட்டத்துக்கு, குழாய் பதிக்கப்பட்டுள்ளது. பாரத் பெட்ரோலிய நிறுவனம், அத்திட்ட குழாய் வரும் வழியில், கோவை இருகூரில் இருந்து, திருப்பூர் அழகுமலை வரை, மற்றொரு குழாயை புதிய திட்டத்துக்காக பதிக்க உள்ளனர். அழகுமலையில் இருந்து, பெங்களுரு வரை திருப்பூர், ஈரோடு உட்பட, ஏழு மாவட்ட விளை நிலம் வழியாக கொண்டு செல்கின்றனர். ஏற்கனவே, கெயில் குழாய் பதிப்பு திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி, அதே விளை நிலங்கள் வழியாக இக்குழாயை பதிக்கின்றனர். போலீசார், மாவட்ட நிர்வாகத்தின் கவனம் தேர்தலில் உள்ளதால், ஒரு வாரத்துக்கு மேலாக அழகுமலை முதல் திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதி விளை நிலங்களில், அளவீடு செய்து, குறியீடு பதித்து வருகின்றனர். இதற்கு அழகுமலை முதல், சென்னிமலை வரையிலான விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பல இடங்களில், தங்கள் நிலத்துக்குள், அதிகாரிகள் வரக்கூடாது என, விவசாயிகள் வாக்குவாதம் செய்தனர். குழாய் பதித்தால், குழாயின் இருபுறமும் தலா, 35 அடிக்கு எந்த விவசாய பணியும் செய்யக்கூடாது. ஆழ்துளை கிணறு, பிற கிணறுகள் அமைக்கக்கூடாது. ஆழமாக வேர் விடும் மரம் நடக்கூடாது. கனரக இயந்திரங்கள் பயன்படுத்தக்கூடாது. பாசனப்பணிக்காக, குழாய், டியூப் உள்ளிட்ட எதையும் குழாயை கடந்து செல்லக்கூடாது என, பல விதிகள் உள்ளன. இத்திட்டம் நடத்துவது குறித்து, மக்களிடம் கருத்து கேட்கவில்லை. இது, ஆபத்தான திட்டம் என்பதை அறிந்து, மாவட்ட நிர்வாகம் உடனடியாக இப்பணிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் விவசாயிகளையும், பொதுமக்களையும் சிரமப்படுத்தும் போக்கை கைவிட வேண்டும் அல்லது போராட்டத்தில் இறங்கும் நிலை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X