சாலையில் ஓடும் குடிநீர்: கிருஷ்ணகிரி பெங்களூரு சாலையில் டான்சி வளாக நுழைவு வாயில் எதிரில், சாலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. கடும் வறட்சியால், குடிநீருக்கு மக்கள் தவித்து வருகின்றனர். தினமும், இந்த சாலையில், பல அதிகாரிகள் சென்றாலும், மாதக்கணக்கில் குடிநீர் வீணாகி வருவதை கண்டு கொள்ளவில்லை. இதனால், தொடர்ந்து குடிநீர் வீணாகிறது. இந்த குழாய் உடைப்பை உடனே சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மோசமான சாலை; சீரமைத்தால் நலம்: ஓசூர் அலசநத்தம் பகுதியில் இருந்து, தோட்டகிரிக்கு தார்ச்சாலை செல்கிறது. இங்கு போக்குவரத்து அதிகமுள்ளது. சாலையில் ஆங்காங்கு மண் நிறைந்து காணப்படுகிறது. குண்டும், குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி வருகின்றனர். கனரக வாகனங்கள் செல்லும் போது, பின்னால் இருசக்கர வாகனங்களில் செல்ல முடியாத அளவிற்கு புழுதி புயல் ஏற்படுகிறது. எனவே, உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
குழாயில் இருந்து வீணாகும் தண்ணீர்: ஊத்தங்கரை அடுத்த வண்ணாம்பள்ளி கிராமத்தின் வழியாக, ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் குழாய் செல்கிறது. இப்பகுதியில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை உள்ளதால், இங்குள்ள பொதுமக்கள் ஒகேனக்கல் குழாயைத் திறந்து குடிநீர் பிடித்து வந்தனர். நாளடைவில் குழாயை சரியாக மூடி முடியாததால், அதிலிருந்து பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது. குடிநீர் வீணாவதை தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.