கிருஷ்ணகிரி: குருத்தோலை ஞாயிறு தினத்தையொட்டி, கிறிஸ்துவ மக்கள் குருத்தோலையை ஏந்தி, ஊர்வலமாக சென்றனர். இயேசு கிறிஸ்து துன்பத்துக்கு ஆளாகி இறப்பதற்கு, ஒரு வாரத்துக்கு முன் எருசலேம் நகருக்குள், ஒரு கழுதையின் மீது அமர்ந்து வந்தார். வழியெங்கும் தரைவிரிப்புகள் விரிக்கப்பட்டு கைகளில், பேரீச்சை மரத்தின் குருத்துகள், ஒலிவ மரத்தின் கிளைகள் மற்றும் லில்லி மலர்களை ஏந்தியபடி, இயேசுவை முன்னால் போகச்செய்து மக்கள் அணிவகுத்துச் சென்றனர். அப்போது, ஆண்டவர் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர் எனும் துதிப்பாடலை பாடியவாறு, நகர் வலம் வந்தனர். இந்த நாளை உலகில் உள்ள கிறிஸ்தவ மக்கள், குருத்தோலை ஞாயிறாக கடைபிடித்து வருகின்றனர். அதன்படி நேற்று, கிருஷ்ணகிரி பழையப்பேட்டையில் உள்ள புனித இஞ்ஞாசியர் ஆலயத்தில் இருந்து, குருத்தோலை பவனி துவங்கி, முக்கிய சாலைகள் வழியாக, புனித பாத்திமா அன்னை திருத்தலம் வந்தடைந்தது. குருத்தோலை பவனியில், ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தியவாறு, 'உன்னதங்களின் ஒசாண்ணா' என்ற பாடலைப் பாடியபடி பவனி வந்தனர். பின்னர், ஆலய பங்குதந்தை சூசை தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதேபோல் ஓசூர், பர்கூர், ஊத்தங்கரை, கந்திகுப்பம், எலத்தகிரி என மாவட்டம் முழுவதும் உள்ள, அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் குருத்தோலை பவனி மற்றும் திருப்பலிகள் நடந்தது.