ஓசூர்: தேர்தல் பறக்கும் படையினர் அத்துமீறி நடப்பதாக, காங்., முன்னாள் எம்.எல்.ஏ., மனோகரன் கூறினார்.
ஓசூரில், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த, 1974ல் இருந்து தேர்தலை சந்தித்து வருகிறேன். நேற்று இரவு (நேற்று முன்தினம் இரவு) ஓசூரில் உள்ள ஓட்டலில், தொழிலாளர் ஒருவரது குழந்தைக்கு பிறந்த நாள் விழா நடந்தது. இதில் பங்கேற்க சென்றிருந்தோம். பணப்பட்டுவாடா நடப்பதாக கூறி, திடீரென வந்த மூன்று பறக்கும் படை அதிகாரிகள் தலைமையிலான குழுவினர், பிறந்த நாள் விழாவுக்கு வந்தவர்களின் சட்டை பாக்கெட்டில் கையை விட்டு சோதனை நடத்தினர். மிரட்டும் தொணியில் தேர்தல் பறக்கும் படையினர் பேசினர். இதை, எங்களது வேட்பாளரிடம் பேசி, தேர்தல் கமிஷன் வரை கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம். எமர்ஜென்சி காலத்தில் கூட இப்படி ஒரு நிலைமை இல்லை. ஜனநாயக நாட்டில், சர்வாதிகாரம் நடப்பதை இது காட்டுகிறது. இது மாறக்கூடிய நிலை வரும். அதற்கு மக்கள் அனைவரும் கட்டாயம் ஓட்டளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.