| சென்னையில் வழக்கம் போல ஓட்டுப்பதிவு மந்தம், கலவரமின்றி முடிந்தது தேர்தல்; இயந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு Dinamalar
சென்னையில் வழக்கம் போல ஓட்டுப்பதிவு மந்தம், கலவரமின்றி முடிந்தது தேர்தல்; இயந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஏப்
2019
01:24

சென்னையில் வழக்கம் போல, லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, மந்தமாக நடந்தது. குறைந்த அளவு ஓட்டுப்பதிவு நடந்த போதிலும், எந்த இடத்திலும், கலவரம் உள்ளிட்ட பெரிய அளவிலான அசம்பாவித சம்பவங்கள் நடைபெறவில்லை.ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கோளாறு, வாக்காளர் பட்டியலில் குளறுபடி உள்ளிட்ட வழக்கமான பிரச்னைகள், அதிகளவில் காணப்பட்டன. பேட்டையில், இஸ்லாமியர்கள், 4,000 பேருக்கு ஓட்டுகள் இல்லை எனக் கூறி, தண்டையார்பேட்டை, வட சென்னை சமூக சேவை நடுநிலைப் பள்ளி முன், திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின், போலீசாருடன் தகராறில் ஈடுபட்டனர்.
அதிவிரைவு படை போலீசார், தகராறை கட்டுக்குள் கொண்டு வந்தனர்l தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள, சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 100க்கும் மேற்பட்டோருக்கு ஓட்டு இல்லை எனக்கூறி, போலீசாருடன், மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்l வட சென்னையில், மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், பல இடங்களில், ஓட்டுப் பதிவு தாமதமானது. தேர்தல் ஊழியர்கள், டார்ச் லைட்டில், வாக்காளர் சரிபார்ப்பு, விரலில் மை வைத்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டனர்l தண்டையார்பேட்டை, சேனியம்மன் கோவில், அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள, 167, 173, 174வது ஓட்டுச் சாவடிகளில், 7:00 மணி முதல், 7:30 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வ.உ.சி., நகரில், தனியார் பள்ளியில், 73, 74வது ஓட்டுச்சாவடிகளில், மின்சாரம் தடைபட்டதுl தண்டையார்பேட்டை, இரட்டைக்குழி தெருவில், தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கத்தின், 34 பெண்கள், ஆறு ஆண்கள் என, மொத்தம், 40 பார்வையற்றோர், சேனியம்மன் கோவில் தெருவில் உள்ள, அரசு மேல்நிலைப் பள்ளி ஓட்டுச்சாவடியில், தங்களது ஓட்டுகளை நேற்று பதிவு செய்தனர். பிரைலி முறையில், பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட ஓட்டுப் பதிவு இயந்திரத்தில், வேட்பாளர்களை கண்டறிந்து ஓட்டு போட்டனர்l கூவம் ஆற்றோரத்தில் இருந்து, பெரும்பாக்கத்திற்கு குடிபெயர்ந்த மக்கள், தங்களுக்கு ஓட்டளிக்க அனுமதி கோரி, அண்ணா சாலை ஓட்டுச்சாவடிக்கு வந்ததால் சலசலப்பு ஏற்பட்டதுl எம்.கே.பி.நகர், விவேகானந்தா வித்யாலயா பள்ளி ஓட்டுச்சாவடியில், மாலை, 4:00 மணிக்கு, 2,000க்கும் மேற்பட்ட மக்கள், திடீரென ஓட்டு போட குவிந்ததால், அங்கு பரபரப்பு நிலவியது. கூட்டம் தொடர்ந்து அதிகரித்ததால், பள்ளி நுழைவாயிலை, போலீசார் மூடினர். 'டோக்கன்' கொடுத்து, 6:00 மணிக்கு பிறகும், ஓட்டுப்பதிவு செய்ய, வாக்காளர்கள் அனுமதிக்கப்பட்டனர்l புழல், காவாங்கரை, தனலட்சுமி நகரில், பூத் ஸ்லிப்பின்றியும், வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டும், ஓட்டளிக்க முடியாமல், ஏமாற்றம் அடைந்தவர்கள், உதவி தேர்தல் அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்l கோடம்பாக்கம், பாத்திமா மெட்ரிக் பள்ளியில், நேற்று மாலை, 5:00 மணிக்கு, மூதாட்டி தர்மாம்பாள். 92, என்பவர், தன் மகள்களுடன் ஓட்டளிக்க வந்தார். மையத்தில் இருந்த, வீல் சேரில் அமர்ந்து சென்று, தன் ஓட்டை பதிவு செய்தார்l மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட, கீழ்ப்பாக்கம் மன நல மருத்துவமனை வளாகத்தில், முதல் முறையாக அமைக்கப்பட்ட ஓட்டுச்சாவடியில், 159 பேர் ஓட்டுப்பதிவு செய்தனர்l சிந்தாதிரிப்பேட்டை, பிளம்பிங் ஸ்டேஷன் சாலையில், தி.மு.க.,வினர் நேற்று காலை, வாக்காளர்களுக்கு, 500 ரூபாய் பட்டுவாடா செய்ததாக புகார் வந்ததால், பரபரப்பு ஏற்பட்டதுl பொது விடுமுறை அறிவிக்கப்பட்டதால், கோயம்பேடு மார்க்கெட், நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.கமிஷனர்கள் ஓட்டுப்பதிவுபோலீஸ் கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன், மனைவியும், கூடுதல், டி.ஜி.பி.,யுமான, சீமா அகர்வாலுடன் நேற்று காலை, 7:30 மணிக்கு, ஆழ்வார்பேட்டை, ஸ்ரீநிவாஸ் காந்தி நிலையத்தில் ஓட்டுப்பதிவு செய்தார். ஜல்லடியான்பேட்டை, புனித தோமையர் மலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர், பிரகாஷ் ஓட்டளித்தார்.புதுமண தம்பதியர் ஜனநாயக கடமை!சைதாப்பேட்டையைச் சேர்ந்த மணிகண்டன் - மணிமாலா ஆகியோருக்கு நேற்று திருமணம் நடந்தது. தம்பதி மணக்கோலத்தில் ஓட்டு போட்டனர். அதேபோல், வேளச்சேரி மணமக்களான, கார்த்திக், 25, கன்னியம்மாள், 23, ஓட்டு போட்டனர். பூந்தமல்லியை அடுத்த பாரிவாக்கத்தை சேர்ந்த விஸ்வநாதன் - ஹரிபிரியா ஆகியோருக்கு, திருத்தணி கோவிலில், நேற்று காலை திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும், பாரிவாக்கம் ஊராட்சி தொடக்க பள்ளியில், மணக்கோலத்தில் வந்த இந்த தம்பதி, ஜனநாயக கடமை ஆற்றினர். புழல், சூரப்பட்டு, மதுரா மேட்டூர், 4வது தெருவைச் சேர்ந்த ராமு - தீபா; கொரட்டூரைச் சேர்ந்த மோகன் - சண்முகபிரியா ஆகியோருக்கு நேற்று திருமணம் நடந்தது. மணக்கோலத்தில், இந்த தம்பதி, அவரவருக்குரிய ஓட்டுச்சாவடிக்கு சென்று, ஜனநாயக கடமை ஆற்றினர்.இயந்திரங்கள் 'மக்கர்'l புதுவண்ணாரப்பேட்டை, நாகூரான் தோட்டம், அரசு மேல்நிலைப் பள்ளியில், 9:15 மணியளவில் ஓட்டுப் பதிவு இயந்திரம் பழுதடைந்தது; 30 நிமிடம் ஓட்டுப்பதிவு தாமதமானது. 9:45 மணிக்கு மாற்று இயந்திரம் வரழைக்கப்பட்டு, மீண்டும் ஓட்டுப் பதிவு துவங்கியதுl கொருக்குப்பேட்டை, மண்ணப்பர் தெருவில், தியாகராய பள்ளி ஓட்டுச்சாவடியில், இயந்திர கோளாறு காரணமாக, 15 நிமிடம் ஓட்டுப்பதிவு தாமதமானதுl என்.கே.பி., நகர், அரசு மேல்நிலைப் பள்ளியில், 199 ஓட்டுச்சாவடியில், 7:00 மணி முதல், 7:30 மணி வரை இயந்திரம் பழுதானதுl எண்ணுார், நெட்டுகுப்பம் நகராட்சி நடுநிலைப்பள்ளி ஓட்டுசாவடியில், ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. ஒன்றரை மணி நேரத்திற்கு பின். புதிய இயந்திரம் கொண்டு வரப்பட்டு, ஓட்டுப்பதிவு நடந்தது.l உள்ளகரம், பஞ்சாயத்து பள்ளி ஓட்டுச்சாவடியில், நேற்று காலை இரண்டு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்தன. அவற்றில் ஒன்று சரி செய்யப்பட்டது. மற்றொன்று மாற்றப்பட்டது. இதனால், இரண்டு ஓட்டுச்சாவடியிலும், 1 மணிநேரம் தாமதமாக ஓட்டுப்பதிவு துவங்கியது.l நங்கநல்லுார், மாடர்ன் பள்ளி ஓட்டுச்சாவடியில், இரண்டு ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதடைந்தது; அதை சரிசெய்ய காலதாமதம் ஏற்பட்டதால், ஒன்றரை மணிநேரம் தாமதமாக ஓட்டுப்பதிவு துவங்கியது.l ஆதம்பாக்கம், இந்திராகாந்தி பள்ளி ஓட்டுச்சாவடியில், இயந்திர கோளாறு காரணமாக, 45 நிமிடம் ஓட்டுப்பதிவு தாமதமானது. ஆதம்பாக்கம் புனித மார்க் பள்ளியிலும், ஒரு மணி நேரம் ஓட்டுப்பதிவு தாமதமாக துவங்கியது. ஆலந்துார், ஏ.ஜி.எஸ்., மேல்நிலைப் பள்ளியில் ஒரு மணிநேரம் தாமதமானதுl ஆதம்பாக்கம், பிரிட்டோ கல்லுாரியில், கோளாறு காரணமாக, 50 நிமிடம் ஓட்டுப்பதிவு தாமதமாக துவங்கியது.மூன்று அடுக்கு பாதுகாப்புசென்னை, சிந்தாதிரிப்பேட்டை, மேற்கு கூவம் ஆற்றுச் சாலையில், மாநகராட்சி உயர் நிலை பள்ளி ஓட்டுச்சாவடியில்,
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, போலீஸ் கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன் ஆய்வு செய்தார். பின், அவர் அளித்த பேட்டி:சென்னையில், அமைதியாகவும், பாதுகாப்பாகவும் ஓட்டுப்பதிவு நடந்தது. போலீசார் உரிய பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.எதிர்பார்த்ததை விட, வெளியூர் செல்லும் பயணியர் அதிகம் குவிந்ததால், கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து அதிகாரிகளுடன் உடனடியாக பேசி, கூடுதல் பேருந்து இயக்கப்பட்டது. வட சென்னை மற்றும் பெரம்பூர் தொகுதி ஓட்டுகள், ராணி மேரி கல்லுாரியில் எண்ணப்படுகிறது. மத்திய சென்னை தொகுதி ஓட்டுகள், லயோலா கல்லுாரியிலும், தென் சென்னை தொகுதி ஓட்டுகள், கிண்டி, அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள, பொறியியல் கல்லுாரியிலும் எண்ணப்படுகின்றன.இந்த மூன்று மையங்களுக்கும், துணை ராணுவ படையினர், ஆயுதம் ஏந்திய போலீசார் என, மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எட்டு மணி நேர பணி என, சுழற்சி அடிப்படையில், துணை ராணுவ படையினர் உட்பட, 1000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்று மையங்களிலும், 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.- நமது நிருபர் குழு - 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X