ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகதோப்பில் வீசிய சூறாவளியில் ஏராளமான மா , தென்னை மரங்கள் சாய்ந்து விழுந்ததில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மாங்காய்கள் உதிர்ந்து விழுந்ததால் விவசாயிகள் வேதனையடைந்தனர்.ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகதோப்பு மேற்கு தொடர்ச்சி மலையடிவாரபகுதியில் பல நுாறு ஏக்கர் பரப்பளவில் மா மற்றும் தென்னந்தோப்புகள் உள்ளது. தற்போது மாம்பழ சீசன் துவங்கி உள்ளநிலையில் ஒவ்வொரு தோப்பிலும் சப்பட்டை, பஞ்சவர்ணம், கல்லாமை உட்பட பலவகை மாங்காய்கள் பருவமடைந்து பறிக்கும் தருவாயில் கிளைகளில் தொங்கி கொண்டிருந்தது.
நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு பலத்த சூறாவளி காற்று வீசியது. தோப்புகளில் தங்கியிருந்தவர்கள் அச்சமடைந்தனர். காற்றில் மரங்கள் சாய்ந்து, மாங்காய்கள் மண்ணில் பதிந்து கிடந்தது. இதையடுத்து நேற்று காலை மாங்காய்களை விவசாயிகள் சேகரித்தனர். ஆண்டு முழுவதும் மரங்களை பராமரித்து பறிக்கும் நிலையில் மாங்காய்கள் சூறாவளியால் உதிர்ந்து விழுந்தது கண்டு விவசாயிகள் கண்ணீர் வடித்தனர். கூலிக்கு கூட கட்டாதுமம்சாபுரம் விவசாயி கோபாலன், ''செண்பகதோப்பு பகுதியில் 75 சதவீத விவசாயிகள் பல லட்சம் ரூபாய்க்கு குத்தகைக்கு எடுத்தும், 25 சதவீதம் விவசாயிகள் சொந்தமாகவும் மா, தென்னை தோப்புகளை பராமரித்து வருகிறார்கள்.
தற்போது துவங்கிய மாம்பழ சீசனில் மாங்காய்கள் பருவமடைந்து பறிக்கும் தருவாய்க்கு வந்த நிலையில் சூறாவாளி காற்றால் கொத்து, கொத்தாக உதிர்ந்து தரையில் கிடப்பது வேதனையடைய செய்துள்ளது. ஏற்கனவே வறட்சியால் யானைகள், காட்டுபன்றிகள் தோப்புகளை சேதபடுத்தி உள்ளது. இந்நிலையில் சூறாவாளி காற்றில் மாங்காய்கள் பறிபோய் உள்ளது. இதை சேகரிக்க கூலிக்கான விலை கூட கட்டாது,''என்றார்.